ஈரோட்டில் மகப்பேறு ஆஸ்பத்திரி ஸ்கேன் சென்டருக்கு 'சீல்' சுகாதார நலப்பணி அதிகாரிகள் நடவடிக்கை

அதிகாரிகள் நடவடிக்கை

Update: 2022-12-13 19:30 GMT

ஈரோட்டில் மகப்பேறு ஆஸ்பத்திரி ஸ்கேன் சென்டருக்கு 'சீல்' வைத்து சுகாதார நலப்பணி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

கண்காணிப்பு குழு

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே கோகிலா சேகர் நர்சிங் ஹோம் என்ற பெயரில் மகப்பேறு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் மகப்பேறு மற்றும் பெண்கள் சிறப்பு மருத்துவராகவும், உரிமையாளராகவும் கோகிலா சேகர் என்பவர் உள்ளார்.

இங்கு மகப்பேறின் போது தாய் -சேய் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதாகவும், ஆஸ்பத்திரியில் போதிய சுகாதார மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணிக்கு தொடர்ந்து புகார் வந்தது. இதைத்தொடர்ந்து அவர், கண்காணிப்பு குழு ஒன்றை அமைத்து கோகிலா சேகர் நர்சிங் ஹோம் ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட சுகாதாரப்பிரிவின் மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஸ்கேன் சென்டருக்கு சீல்

அதன்பேரில், சம்மந்தப்பட்ட ஆஸ்பத்திரியில் மருத்துவக்குழுவினர் திடீர் ஆய்வு நடத்தியதில், பிரசவத்தின் போது பெண்களுக்கு பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகள் உள்ளிட்டவை காலவதியானவற்றை பயன்படுத்தியதும், நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரியில் போதிய அடிப்படை வசதி இல்லாமல் இருப்பது போன்ற பல்வேறு குறைபாடுகள் உள்ளதை கண்டறிந்து, ஈரோடு கலெக்டருக்கு அறிக்கையை தாக்கல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து, சம்மந்தப்பட்ட மருத்துவமனையின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில், ஈரோடு மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் பிரேமகுமாரி தலைமையிலான குழுவினர், கோகிலா சேகர் நர்சிங் ஹோம் ஆஸ்பத்திரியில் நேற்று ஆய்வு மேற்கொண்டு, ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணி முன்னிலையில் ஆஸ்பத்திரி ஸ்கேன் சென்டருக்கு 'சீல்' வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

நோட்டீஸ்

மேலும், கோகிலா சேகர் ஆஸ்பத்திரியில் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் சிகிச்சை மேற்கொள்ள 15 நாட்களுக்கு தடை விதித்தும், இந்த 15 நாட்களுக்குள் மருத்துவமனையில் உள்ள குறைபாடுகள் குறித்து உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, அதற்கான நோட்டீஸ் வழங்கினர். இதைத்தொடா்ந்து, கோகிலா சேகர் மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து வந்த 10 பேர், வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமகுமாரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தாய் சேய் நலனை காக்க ஆஸ்பத்திரிகளில் மாதந்தோறும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கோகிலா சேகர் ஆஸ்பத்திரியில் பலமுறை ஆய்வு நடத்தி, பல்வேறு மாற்றங்களை செய்ய அறிவுறுத்தினோம். ஆனால், இதுவரை எந்தவித மாற்றமும் செய்யமல் தொடர்ந்து ஆஸ்பத்திரியை நடத்தி வந்தனர்.

ஆஸ்பத்திரி செயல்பட தடை

மேலும் ஈரோடு கலெக்டரால் நியமிக்கப்பட்ட ஒரு குழுவினரும் இந்த ஆஸ்பத்திரியில் திடீா் ஆய்வு மேற்கொண்டனர். அப்போதும், ஏராளமான குறைபாடுகளை கண்டறிந்து, கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். இதற்கிடையில் இந்த ஆஸ்பத்திரியில் சமீபத்தில் ஒரு குழந்தை ஒன்று பிறந்து, தொற்று காரணமாக உயிர் இழந்துள்ளது என நிரூபிக்கப்பட்டது. அப்போது, மீண்டும் மருத்துவ குழு ஆய்வு செய்து குறைகளை நிவர்த்தி செய்ய அறிவுறுத்தினர். ஆனால் ஆஸ்பத்திரி நிர்வாகம் செய்யவில்லை. இதன் காரணமாக ஆஸ்பத்திரியில் ஸ்கேன் செய்ய வழங்கப்பட்டிருந்த அனுமதியை ரத்து செய்து, 'சீல்' வைத்துள்ளோம்.

15 நாட்களுக்கு ஆஸ்பத்திரியில் உள் நோயாளிகள், வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள தடை விதித்து நோட்டீஸ் வழங்கியுள்ளோம். தற்போது ஆஸ்பத்திரியில் 10 நோயாளிகள் உள்ளனர். அதில் 6 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளனர். மீதமுள்ள 4 பேர் வேறு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்ல இரவுக்குள் டிஸ்சார்ஜ் செய்ய உள்ளனர். மருத்துவ உபகரணங்கள் மற்றும் காலவதியான மருந்துகள் ஆஸ்பத்திரியில் இருந்ததை கண்டறிந்து கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பித்த பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்