ஈரோட்டில்சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனம்;வட்டார போக்குவரத்து அதிகாரி தொடங்கி வைத்தார்

ஈரோட்டில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனத்தை வட்டார போக்குவரத்து அதிகாரி தொடங்கி வைத்தார்.

Update: 2023-01-18 22:16 GMT

ஈரோட்டில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனத்தை வட்டார போக்குவரத்து அதிகாரி தொடங்கி வைத்தார்.

சாலைபாதுகாப்பு வாரம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஈரோடு மண்டலம் சார்பில் 34-வது சாலைபாதுகாப்பு வாரம் சாலை விபத்தினை 50 சதவீதம் குறைப்போம் என்ற தலைப்பில் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ஈரோடு பஸ் நிலையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஈரோடு மண்டலத்தின் பொது மேலாளர் எஸ்.சொர்ணலதா தலைமை தாங்கினார். வணிக மேலாளர் ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப மேலாளர் செல்லப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

விழிப்புணர்வு வாகனம்

ஈரோடு வட்டார போக்குவரத்து அதிகாரி பதுவை நாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழிப்புணர்வு வாகனத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேலும் அவர் சாலை விபத்து குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பயணிகள் மற்றும் கண்டக்டர், டிரைவர்களிடம் வழங்கினார்.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி பதுவை நாதன் கூறும்போது, 'இந்த விழிப்புணர்வு வாகனம் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கும், பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு சாலை பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

இந்த வாகனத்தில், சீட் பெல்ட் அணிவது குறித்தும், 4 வழிச்சாலையில் செல்லும்போது எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பது குறித்தும் வாகன ஓட்டிகளுக்கு விளக்கம் அளிக்கப்படும்' என்றார். இந்த நிகழ்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சுரேந்திரகுமார், சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்