ஈரோட்டில் அதிக மாணவ-மாணவிகளை ஏற்றி வந்த 12 ஆட்டோக்கள் பறிமுதல்

ஈரோட்டில் அதிக எண்ணிக்கையில் பள்ளிக்கூட மாணவ -மாணவிகளை ஏற்றி வந்த 12 ஆட்டோக்களை வட்டார போக்குவரத்து அதிகாரி பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தார்.

Update: 2023-08-16 22:29 GMT

ஈரோட்டில் அதிக எண்ணிக்கையில் பள்ளிக்கூட மாணவ -மாணவிகளை ஏற்றி வந்த 12 ஆட்டோக்களை வட்டார போக்குவரத்து அதிகாரி பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தார்.

மாணவ-மாணவிகள்

ஈரோடு மாநகரில் இயக்கப்படும் ஆட்டோக்களில் அதிக எண்ணிக்கையில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளை ஏற்றுக்கொண்டு அபாயகரமாக இயக்கி வருவதாகவும், இதனால் விபத்துகள் நடக்க அதிக அளவில் வாய்ப்பு உள்ளதாகவும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதைத்தொடர்ந்து ஈரோடு துணை போக்குவரத்து ஆணையாளர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

12 ஆட்டோக்கள் பறிமுதல்

அதன்படி ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட்ரமணி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் மற்றும் போலீசார் ஈரோடு -கரூர் ரோடு சோலார் மற்றும் நாடார்மேடு பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பள்ளிக்கூட மாணவ -மாணவிகளை ஏற்றி வந்த ஆட்டோக்களை சோதனை செய்தனர்.

இதில் 12 ஆட்டோக்களில் பள்ளிக்கூட மாணவ -மாணவிகள் அதிக எண்ணிக்கையில் ஏற்றி வந்ததும், தகுதி சான்று, காப்பு சான்று, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இயக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 12 ஆட்டோக்களையும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரி பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்