ஈரோட்டில் போலி ஆவணம் தயாரித்து சிம்கார்டு விற்பனை செய்த வாலிபர் கைது

ஈரோட்டில், போலி ஆவணம் தயாரித்து சிம்கார்டு விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-17 21:44 GMT

ஈரோட்டில், போலி ஆவணம் தயாரித்து சிம்கார்டு விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

போலி ஆவணம்

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் இளம்பரிதி (வயது 33). இவர் போலியாக ஆவணம் தயாரித்து சிம்கார்டுகளை விற்பனை செய்வதாக ஈரோடு சைபர் கிரைம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசுதா தலைமையிலான போலீசார் இளம்பரிதியை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இளம்பரிதி ஆதாயம் அடையும் நோக்கில் ஒருசிலரின் புகைப்படத்தை பல்வேறு நபர்களின் அடையாள ஆவணங்களுக்கு பயன்படுத்தி போலியான ஆவணம் தயார் செய்தும், ஆள்மாறாட்டம் செய்தும் சம்பந்தப்பட்ட தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு உண்மையான ஆவணம் போல் ஆன்லைனில் அனுப்பி அந்த நிறுவனங்களை நம்பவைத்து சிம்கார்டுகளை விற்றுள்ளது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பரிதியை கைது செய்தனர்.

உதவி எண்

இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் ஆகியோர் கூறும்போது, 'சிம்கார்டு விற்பனை செய்யும் முகவர்கள் இதுபோன்று போலியான ஆவணங்களை வைத்து சிம்கார்டுகளை ஆக்டிவேட் செய்து விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சிம்கார்டு வாங்கும்போது பொதுமக்கள் தங்களது பெயரில் ஒரு சிம்கார்டு மட்டும் தான் ஆக்டிவேட் செய்கின்றார்களா என்பதை உறுதி படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் ஆன்லைன் மோசடி மூலம் பணம் இழப்பு ஏற்பட்டால் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், இழந்த பணத்தை மீட்க அதிக வாய்ப்பு உள்ளது. அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து அல்லது தெரியாத செல்போன் எண்ணில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி எந்த விவரங்களையும் அப்டேட் செய்ய வேண்டாம். வங்கிகளில் இருந்து தொலைபேசி மற்றும் குறுந்தகவல் மூலம் எந்த தகவல்களையும் கேட்கமாட்டார்கள். எனவே பொதுமக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்