ஈரோடு சத்தி ரோட்டில் குண்டும்-குழியுமான ரோட்டால் வாகன ஓட்டிகள் அவதி
ஈரோடு சத்தி ரோட்டில் குண்டும்-குழியுமான ரோட்டால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனா்.
ஈரோடு-சத்தி ரோட்டில் கடந்த சில மாதங்களாக ரோடு விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது ஈரோடு மாநகர் பகுதியில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையில் வீரப்பன்சத்திரம் முனியப்பன் கோவில் பகுதியில் உள்ள ரோடு குண்டும் -குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைந்து வருகிறார்கள்.
நேற்று காலையில் முதியவர் ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்து விட்டார். இதைப்பார்த்த அங்கு நின்று இருந்தவர்கள் அவரை தூக்கி விட்டனர். இதேபோல் பலர் நிலைதடுமாறி கீழே விழுவதை பார்க்க முடிகிறது. எனவே ஈரோடு -சத்தி ரோட்டில் விரிவாக்க பணிகளை விரைந்து முடித்து புதிதாக ரோடு போட நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.