ஈரோடு ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈரோடு ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈரோடு ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
போலீஸ் பாதுகாப்பு
சுதந்திர தின விழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அசாம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் உள்பட பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதியில் போலீசாரின் ரோந்து பணி அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
அதன்படி ஈரோடு ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கு நுழைவு வாயில் பகுதியில் போலீசார் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது ஆபத்தான பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்று ஒவ்வொரு பைகளாக மெட்டல் டிடெக்டர் மூலமாக போலீசார் சோதனை நடத்தினர்.
வாகன தணிக்கை
ஈரோடு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ரெயில் நிலைய நடைமேடைகளில் ரோந்து சுற்றி வருகின்றனர். ஓடும் ரெயில்களிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது சந்தேகப்படும்படி திரியும் நபர்களை பிடித்து விசாரணை நடத்திய போலீசார், அவர்களின் விவரங்களையும் எழுதி வைத்து கொண்டனர். இதேபோல் ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட எல்லைகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். அங்குள்ள சோதனை சாவடிகளில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஈரோடு பஸ் நிலையம், கடை வீதிகள், முக்கிய வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.