ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் வரத்து அதிகரித்ததால் காய்கறி விலை குறைந்தது

ஈரோடு நேதாஜி மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது.

Update: 2023-07-28 21:57 GMT

ஈரோடு நேதாஜி மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது.

காய்கறி மார்க்கெட்

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் வ.உ.சி. மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. அங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. இரவில் மொத்த வியாபாரமும், பகலில் சில்லரை வியாபாரமும் நடக்கிறது. இந்த மார்க்கெட்டுக்கு தாளவாடி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தாராபுரம், கிருஷ்ணகிரி, ஓசூர், மேட்டுப்பாளையம், காங்கேயம், பெங்களூரு, ஆந்திரா உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டு இருந்ததால், வரத்து குறைந்தது. இதனால் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்தது. குறிப்பாக தக்காளியின் விலை உச்சத்தை எட்டியது. ஒரு கிலோ தக்காளி அதிகபட்சமாக ரூ.140 வரை விற்பனையானது.

இதேபோல் சின்ன வெங்காயம் விலையும் ஒரு கிலோவுக்கு ரூ.160 வரை அதிகபட்சமாக உயர்ந்தது. மேலும் இஞ்சியின் விலையும் ரூ.300-க்கு விற்பனையானது.

விலை குறைந்தது

இந்தநிலையில் காய்கறியின் வரத்து சற்று அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இதனால் பெரும்பாலான காய்கறியின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை குறைந்துவிட்டது. ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு நேற்று மொத்தம் 105 டன் காய்கறி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த வாரம் ரூ.120-க்கு விற்ற ஒரு கிலோ கருப்பு அவரை ரூ.100-க்கு விற்பனையானது. பீன்ஸ் ரூ.100-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், ரூ.80-ஆக விலை குறைந்தது.

சின்ன வெங்காயத்தின் விலையும் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.120-க்கு விற்ற சின்ன வெங்காயம் நேற்று ரூ.70-க்கு விற்பனையானது. இதேபோல் ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ.75 ஆக குறைந்தது.

ஈரோடு மார்க்கெட்டில் நேற்று விற்பனையான காய்கறியின் விலை விவரம் வருமாறு:-

கத்தரிக்காய் - (கிலோ) ரூ.70, வெண்டைக்காய் - ரூ.35, முள்ளங்கி - ரூ.20, பாகற்காய் - ரூ.60, பீர்க்கங்காய் - ரூ.50, புடலங்காய் - ரூ.40, சவ்சவ் (மாரக்காய்) - ரூ.15, முருங்கைக்காய் - ரூ.40, பட்ட அவரை - ரூ.50, கேரட் - ரூ.65, பீட்ரூட் - ரூ.60, முட்டைகோஸ் - ரூ.25, காலிபிளவர் - ரூ.40, உருளைக்கிழங்கு - ரூ.40, பெரிய வெங்காயம் - ரூ.35, பழைய இஞ்சி - ரூ.300, புதிய இஞ்சி - ரூ.175

Tags:    

மேலும் செய்திகள்