ஈரோடு மார்க்கெட்டில்மஞ்சள் விலை தொடர்ந்து வீழ்ச்சிகுவிண்டால் ரூ.13,859-க்கு விற்பனை
ஈரோடு மார்க்கெட்டில் விலை குறைந்து மஞ்சள் குவிண்டால் ரூ.13,859-க்கு விற்பனையானது
ஈரோடு மார்க்கெட்டில் மஞ்சள் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. நேற்று ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.13 ஆயிரத்து 859-க்கு விற்பனை ஆனது.
மஞ்சள் விலை வீழ்ச்சி
தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகப்படியாக மஞ்சள் விளைவிக்கப்படுகிறது. இங்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் மாவட்டத்தில் 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது. கடந்த மே மாதம் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.7 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. அதைத்தொடர்ந்து படிப்படியாக விலை உயர்ந்து கடந்த மாதம் 11-ந்தேதி ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.15 ஆயிரத்து 422-க்கு விற்பனை ஆனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையில் கடந்த 20 நாட்களாக மஞ்சள் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. அதாவது 20 நாட்களில் ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,500 வரை விலை குறைந்துள்ளது. நேற்று ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.13 ஆயிரத்து 859-க்கு விற்பனை ஆனது. பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு விவசாயிகள் 1,017 மூட்டை மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்று குறைந்தபட்சமாக ரூ.9 ஆயிரத்து 55-க்கும், அதிகபட்சமாக ரூ.13 ஆயிரத்து 859-க்கும், கிழங்கு மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.8 ஆயிரத்து 559-க்கும், அதிகபட்சமாக ரூ.12 ஆயிரத்து 559-க்கும் ஏலம் போனது. 620 மூட்டை மஞ்சள் விற்பனை ஆனது.
கூட்டுறவு விற்பனை சங்கம்
ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு 3 ஆயிரத்து 22 மூட்டை மஞ்சள் விற்பனைக்கு வந்தது. இதில் விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்று குறைந்தபட்சமாக ரூ.8 ஆயிரத்து 569-க்கும், அதிகபட்சமாக ரூ.13 ஆயிரத்து 389-க்கும், கிழங்கு மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.8 ஆயிரத்து 269-க்கும், அதிகபட்சமாக ரூ.12 ஆயிரத்து 669-க்கும் ஏலம் போனது. மொத்தம் 721 மூட்டை மஞ்சள் மட்டுமே விற்பனை ஆனது.
கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்துக்கு 95 மூட்டை மஞ்சள் விற்பனைக்கு வந்தது. இதில் விரலி மஞ்சள் ஒரு குவிண்டால் குறைந்தபட்ச விலையாக ரூ.8 ஆயிரத்து 1-க்கும், அதிகபட்சமாக ரூ.12 ஆயிரத்து 699-க்கும், கிழங்கு மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.7 ஆயிரத்து 605-க்கும், அதிகபட்சமாக ரூ.11 ஆயிரத்து 88-க்கும் விற்பனை ஆனது. இங்கு 36 மூட்டை மஞ்சள் விற்பனையானது.
ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடத்துக்கு 1,432 மூட்டைகளில் மஞ்சள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்று குறைந்தபட்சமாக ரூ.8 ஆயிரத்து 599-க்கும், அதிகபட்சமாக ரூ.13 ஆயிரத்து 399-க்கும், கிழங்கு மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.8 ஆயிரத்து 339-க்கும், அதிகபட்சமாக ரூ.12 ஆயிரத்து 399-க்கும் ஏலம் போனது. மொத்தம் 729 மஞ்சள் மூட்டைகள் விற்பனை ஆனது. தொடர்ந்து மஞ்சள் விலை வீழ்ச்சி அடைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.