ஈரோடு மார்க்கெட்டில்தக்காளி விலை உயர்வு; கிலோ ரூ.40-க்கு விற்பனை
ஈரோடு மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்ந்து கிலோ ரூ.40-க்கு விற்பனையானது.
ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் வ.உ.சி. பூங்கா மைதானத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகளும், 100-க்கும் மேற்பட்ட பழக்கடைகளும் செயல்பட்டு வருகின்றன. ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தவர்களும், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளும் இங்கு வந்து காய்கறிகள் வாங்கிச்செல்கிறார்கள்.
ஈரோடு மார்க்கெட்டுக்கு, ஆந்திரா, தாளவாடி, அனந்தபூர், கோலார் போன்ற பகுதிகளில் இருந்து 10 டன் தக்காளி வரத்தாகி வந்தன. இதனால் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு விற்பனை ஆனது. இந்த நிலையில் கடும் பனிப்பொழிவு காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது. நேற்று ஈரோடு மார்க்கெட்டுக்கு கர்நாடகா மாநிலம் கோலாரில் இருந்து மட்டும் ஒரு டன் தக்காளி மட்டுமே வரத்தாகி இருந்தது. இதனால் விலை கிடுகிடுவென உயர்ந்து நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்பனையானது.