ஈரோடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு; கிலோ ரூ.80-க்கு விற்பனை

ஈரோடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்து நேற்று ஒருகிலோ ரூ.80-க்கு விற்பனை ஆனது.

Update: 2022-10-13 21:41 GMT

ஈரோடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்து நேற்று ஒருகிலோ ரூ.80-க்கு விற்பனை ஆனது.

சின்ன வெங்காயம்

ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரா பகுதியில் இருந்தும் தினமும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்த காரணத்தால் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு சில காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.

குறிப்பாக சின்ன வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுபோல் தக்காளி விலையும் உயர்ந்து வருகிறது. ஈரோடு மார்க்கெட்டிற்கு தினமும் கம்பம், ஒட்டன்சத்திரம், தாளவாடி, பல்லடம், திருப்பூர், கொடுமுடி ஆகிய பகுதிகளில் இருந்து 15 டன் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வந்தது. மழை காரணமாக சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளது.

விலை உயர்வு

நேற்று காலை ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட்டிற்கு 5 டன் மட்டுமே சின்ன வெங்காயம் வரத்தாகி இருந்தது. இதன் காரணமாக விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.30-க்கு விற்பனை ஆன ஒரு கிலோ சின்ன வெங்காயம் நேற்று ரூ.80-க்கு விற்பனையானது. பெரிய வெங்காயம் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை ஆனது.

இதேபோல் கடந்த சில நாட்களாக தக்காளி விலை குறைந்து வந்த நிலையில் மழை காரணமாக வரத்து குறைந்து மீண்டும் விலை உயர தொடங்கி உள்ளது.

7 ஆயிரம் பெட்டிகள் வரத்தாகி வந்த நிலையில் நேற்று 3 ஆயிரம் பெட்டிகள் தக்காளி மட்டுமே வரத்தானது. இதனால் கடந்த வாரம் ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனையான ஒரு கிலோ தக்காளி நேற்று ரூ.50 வரை விற்பனையானது.

Tags:    

மேலும் செய்திகள்