குன்னூர் சிம்ஸ் பூங்கா பழவியல் நிலையத்தில் பேரிக்காய் ஜாம் தயாரிக்கும் பணி மும்முரம்

குன்னூர் சிம்ஸ் பூங்கா பழவியல் நிலையத்தில் பேரிக்காய் ஜாம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-07-10 10:46 GMT

குன்னூர்

குன்னூர் சிம்ஸ் பூங்கா பழவியல் நிலையத்தில் பேரிக்காய் ஜாம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பேரிக்காய் சீசன்

நீலகிரி மாவட்டம் மலை பிரதேசமாக உள்ளதால் குளு குளு சீசன் நிலவி வருகிறது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது நீலகிரி மாவட்டம் இங்கிலாந்தின் சீதோஷ்ண நிலையை ஒத்து இருந்ததால் அங்கு விளையக்கூடிய பிளம்ஸ், பேரி, பீச் உட்பட பல்­வேறு வகை பழ வகைகளை பயிரிட்டு விளைவித்தனர். அவ்வப்போது நிலவும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப பழங்கள் மகசூல் கொடுத்தன. தற்போது மாவட்டத்தில் பேரிக்காய் சீசன் நிலவி வருகிறது. இதனை விவசாயிகள் ஊடுபயிராகவும் தனியாகவும் பயிரிட்டு மகசூல் எடுத்து வருகின்றனர். அரசு தோட்டக்கலைத்துறையின் கீழ் உள்ள குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப் பண்ணையில் பேரிக்காய், பிளம்ஸ், பீச் உட்பட பழமரங்கள் உள்ளன.

ஜாம் தயாரிக்கும் பணி

சீசனுக்கு ஏற்ப பழங்கள் பழப் பண்ணையிலிருந்து பழவியல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு நிலையத்தில் ஜாம், ஸ்குவாஸ், ஊறுகாய் உள்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன, தற்போது குன்னுார் பகுதிகளில் பேரிக்காய் சீசன் களைகட்டியுள்ளதால் அரசுப்பழப் பண்ணையில் விளைந்த பேரிக்காய் கொண்டு வரப்பட்டு ஒரு டன் அளவிலான பேரிக்காயை கொண்டு ஜாம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த பணிகளில் தோட்டக்கலைத்துறையின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் பேரிக்காய் ஜாம் தயாரிக்கும் பணி முழுமையாக முடித்து தோட்டக்­கலைக்கு சொந்தமான விற்பனை நிலையங்களுக்கு அனுப்ப, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாத பூங்கா நிர்வாகிகள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்