தூத்துக்குடி மாவட்டதத்தில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றால் வாகன ஓட்டிகள் அவதி
தூத்துக்குடி மாவட்டதத்தில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. இதனால் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
பலத்த காற்று
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் அவ்வப்போது லேசான மேகமூட்டம் காணப்பட்டது. அதன்பிறகு வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இந்த நிலையில் ஆடி மாதம் தொடங்கியது முதல் மீண்டும் காற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. கடந்த 2 நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. மேலும் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு பலத்த காற்று வீசி வருகிறது. இந்த நிலையில் தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
60 கிலோ மீட்டர் வேகம்
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. நேற்று காலை முதல் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. காலையில் இருந்து படிப்படியாக அதிகரித்த சூறாவளி காற்று அதிகபட்சமாக மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகம் வரை வீசியது. இதனால் தூத்துக்குடி ரோட்டில் புழுதியை வாரி இறைத்தது. இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். ஆங்காங்கே கடைகளில் வைக்கப்பட்டு இருந்த பெயர்பலகைகள் காற்றில் கீழே சரிந்து விழுந்தன. இந்த காற்று காரணமாக வெயிலின் தாக்கம் குறையத் தொடங்கி இருக்கிறது