போக்சோ வழக்கில் உதவி தலைமையாசிரியர் கைது

போக்சோ வழக்கில் உதவி தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-12 18:51 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ரமேஷ் (வயது 45). இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பள்ளி நிர்வாகத்திற்கு தெரியாமல் பிளஸ்-2 படிக்கும் 5 மாணவ-மாணவிகளை சுற்றுலா அழைத்து சென்று ஒழுங்கினமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிலர் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர். இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக கல்வித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, சமூகபாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் புகாரில் சிக்கியுள்ள ஆசிரியர் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சமூக அலுவலர் கோகுலப் பிரியா ஒரு புகார் மனு அளித்தார்.

அதில், அந்த மாணவிகளை உதவி தலைமையாசிரியர் பாலியல் தாக்குதல் செய்ததாகவும், இதனை வெளியில் சொன்னால் செய்முறை தேர்வில் மதிப்பெண்ணை குறைத்து விடுவதாக மிரட்டியதாக புகாரில் தெரிவித்து இருந்தார்.

அதன் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து உதவி தலைமையாசிரியர் ரமேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்