தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டதால் 2 பேர் கைது-சிறையில் அடைக்க உதவி கலெக்டர் உத்தரவு
மேட்டூரில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட வாலிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை சிறையில் அடைக்க உதவி கலெக்டர் தணிகாசலம் உத்தரவிட்டுள்ளார்.
குற்றச்செயல்கள்
மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ரகு (வயது 43). கருமலைக்கூடலை சேர்ந்தவர் மதி என்ற மதியழகன் (21). இவர்கள் இருவர் மீதும் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த ரகு மற்றும் மதி ஆகியோர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் அவர்களை மேட்டூர் உதவி கலெக்டர் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கை செய்து உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கப்பட்டனர்.
2 பேர் கைது
ஆனால் அவர்கள் அளித்த உறுதிப்பத்திரத்தை மீறி ரகு மற்றும் மதி ஆகியோர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் இருவரையும் நேற்று போலீசார் கைது செய்து மேட்டூர் உதவி கலெக்டர் தணிகாசலம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
பின்னர் மேட்டூர் ரகுவை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 4-ந் தேதி வரை 9 மாதங்கள் வரையும், கருமலைக்கூடலை சேர்ந்த மதியை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 29-ந் தேதி வரை5 மாதங்கள் வரையும் சிறையில் அடைக்க உதவி கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.