திருச்செந்தூரில் உதவி கலெக்டர் அலுவலகத்தைகாலிகுடங்களுடன் கிராம பெண்கள் முற்றுகை

திருச்செந்தூரில் உதவி கலெக்டர் அலுவலகத்தை காலிகுடங்களுடன் கிராம பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2023-08-24 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் உதவிகலெக்டர் அலுவலகத்தை நேற்று அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நா.முத்தையாபுரம் கிராம பெண்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

காலி குடங்களுடன் முற்றுகை

திருச்செந்தூர் யூனியன் மேல திருச்செந்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நா.முத்தையாபுரம் கிராமத்தை ேசர்ந்த மகளிர் சுய உதவி குழு கூட்டமைப்பு பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் நேற்று திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு போராட்டம் நடத்தினர்.

கோரிக்கைகள்

நா.முத்தையாபுரம் கிராமத்தில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான பஸ் வசதி, தடையில்லாத குடிநீர் வினியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். நா.முத்தையாபுரம் பகுதியில் அனைத்து துறை அதிகாரிகள் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதனால் உதவிகலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

உதவிகலெக்டர் உறுதி

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் உதவி கலெக்டர் குருச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, வருகிற 29-ந் தேதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து பேசி கோரிக்கைகளுக்கு தீர்வுகாண உறுதியான முடிவு எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்