தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சட்டசபை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு செய்தது.
ஆய்வு
தஞ்சை குந்தவைநாச்சியார் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் ரூ.1 கோடியே 26 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவிகள் விடுதி கட்டுமான பணிகளை தமிழ்நாடு சட்டசபை பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.ஆர்.ராஜா தலைமையிலான குழு உறுப்பினர்கள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள், தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சென்று அங்குள்ள படுக்கைகள், கட்டிடங்கள், அவசர சிகிச்சைப்பிரிவு, அறுவை அரங்குகள் ஆகியவற்றை பார்வையிட்டதுடன் ஸ்கேன் கருவியின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
துணை மின் நிலையம்
தொடர்ந்து அவர்கள், மருந்து கிடங்கிற்கு சென்று அங்கு அத்தியாவசிய மருந்துகளின் இருப்பு விவரம் குறித்து கேட்டறிந்தனர். இதையடுத்து நாஞ்சிக்கோட்டையில் ரூ.3 கோடியே 47 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் துணை மின் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதற்கு சட்டசபை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், குழு உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், கிருஷ்ணசாமி, தமிழரசி, தளபதி, நாகைமாலி, பாலாஜி, ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விரைவில் அறிக்கை
கூட்டத்தில் தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனம், அரசு போக்குவரத்து கழகம், மருத்துவ பணிகள் கழகம், மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், தொழில் முன்னேற்ற நிறுவனம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம், தாட்கோ, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மாவட்ட இயற்கை மேலாண்மை அழகு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தையும் விரைவில் முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பின்னர் கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தாட்கோ திட்டத்தின் கீழ் 4 பேருக்கு ரூ.8 லட்சத்து 93 ஆயிரத்து 565 மானிய கடனுதவியுடன் கூடிய ரூ.32 லட்சத்து 44 ஆயிரத்து 258 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ரூ.2½ கோடி மதிப்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்கான கடனுதவிக்கான காசோலையையும் குழு தலைவர் ராஜா, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் வழங்கினர்.
இதில் குழு சிறப்பு பணி அலுவலர் எம்.எல்.கே.ராஜா, கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், துணை மேயர் அஞ்சுகம்பூபதி மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.