சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு ஆய்வு

கொடைக்கானலில் சட்டமன்ற பொதுநிறுவனங்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

Update: 2022-06-21 16:10 GMT

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.ஆர்.ராஜா (தாம்பரம் எம்.எல்.ஏ.) தலைமையில், அக்குழுவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அரவிந்த் ரமேஷ் (சோளிங்கநல்லூர்), காதர்பாட்சா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்) கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), தமிழரசி (மானாமதுரை), தளபதி (மதுரை வடக்கு), நாகை மாலி (கீழ்வேளூர்), பாலாஜி (திருப்போரூர்), ரூபி மனோகரன் (நான்குநேரி) ஆகியோர் கொடைக்கானலுக்கு வருகை தந்தனர். அப்போது அவர்கள் கொடைக்கானலில் உள்ள பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதன்படி, இக்குழுவினர் முதலில் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் உள்ள பல்வேறு பிரிவுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள குறைகள் குறித்து அரசு டாக்டர்களிடம் கேள்விகளை எழுப்பினர். அதைத்தொடர்ந்து நட்சத்திர ஏரியில் தண்ணீர் வெளியேறும் பகுதி, புதிதாக செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தினர். பின்னர் செயிண்ட் மேரீஸ் ரோட்டில் உள்ள தனியார் பாதரச தொழிற்சாலையில் நடைபெற்று வரும் சுத்திகரிப்பு பணிகளை பார்வையிட்டனர். தொடர்ந்து அண்ணாநகரில் உள்ள ஆதிதிராவிடர் பெண்கள் விடுதியை பார்வையிட்டு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர். அப்போது இந்த விடுதி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் புதிய கட்டிடம் கட்ட ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இந்த நிதி போதாது என்பதால் கூடுதல் நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குழு தலைவர் எஸ்.ஆர்.ராஜா தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் விசாகன், வருவாய் அலுவலர் லதா, கொடைக்கானல் ஆர்.டி.ஓ. முருகேசன், நகராட்சி ஆணையாளர் நாராயணன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய சந்திரிகா, நகர் நல அலுவலர் டாக்டர் அரவிந்த், நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்