பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் மீது தாக்குதல்
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் மீது தாக்குதல் நடத்திய 5 பெண்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
சிவகாசி,
சிவகாசி தாலுகாவில் உள்ள ரெங்கபாளையம் மேற்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருடைய மனைவி சுப்புலட்சுமி (வயது 31). இவர் ரெங்கபாளையம் அரசு தொடக்கப்பள்ளியின் மேலாண்மைக்குழு உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி ஆண்டுவிழாவில் கலந்து கொள்ள சென்ற சுப்புலட்சுமியை, அதே பகுதியை சேர்ந்த சித்ரா, சீதாலட்சுமி, ராஜலட்சுமி, முருகேஸ்வரி, மாரீஸ்வரி ஆகியோர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த சுப்புலட்சுமி சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். தான் தாக்கப்பட்டது குறித்து எம்.புதுப்பட்டி போலீசில் சுப்புலட்சுமி புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சித்ரா உள்ளிட்ட 5 பெண்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.