வியாபாரியை தாக்கி பணம்-நகை பறிப்பு; ஒருவர் கைது
வியாபாரியை தாக்கி பணம்-நகை பறித்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
வியாபாரி
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இரும்புலிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கலைவாணன்(வயது 34). இவர் வேப்பங்கொட்டை வியாபாரம் செய்து வருகிறார். இவர் வழக்கம்போல் கிராமத்தில் இருந்து வேப்பங்கொட்டைகளை அரியலூரில் உள்ள சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வந்தார்.
ஆனந்தவாடி காலனி தெரு அருகே வந்தபோது அவரை, சிலர் வழிமறித்து கடுமையாக தாக்கி, அவர் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலி மற்றும் ரூ.15 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த சரவணன், அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கைது
இது குறித்த புகாரின்பேரில் இரும்புலிக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி, ஆனந்தவாடி காலனி தெருவை சேர்ந்த மகாலிங்கம், அருண்குமார், சக்திவேல், சிவன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் மகாலிங்கத்தை போலீசார் கைது செய்து செந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயங்கொண்டம் சிறையில் அடைத்தனர். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வியாபாரியை தாக்கி நகை-பணம் பறிக்கப்பட்ட சம்பவம் இரும்புலிக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.