குழந்தைகள் நல பெண் அதிகாரி மீது தாக்குதல்
மார்த்தாண்டத்தில் குழந்தைகள் நல பெண் அதிகாரியை அவருடன் தங்கியிருந்த பெண் தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழித்துறை:
மார்த்தாண்டத்தில் குழந்தைகள் நல பெண் அதிகாரியை அவருடன் தங்கியிருந்த பெண் தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெண் அதிகாரி
கோவை மாவட்டம் ரெங்கசாமி நாயுடு லே அவுட் பகுதியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம். இவருடைய மகள் வித்யாஸ்ரீ (வயது 24). இவர் திருவட்டார் வட்டார அரசு குழந்தைகள் நல அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இதற்காக மார்த்தாண்டம் வடக்கு தெருவில் உள்ள ஒரு தனியார் பெண்கள் விடுதியில் தங்கியிருந்தார். இந்த விடுதியில் இருந்து தினமும் திருவட்டாருக்கு சென்று வருகிறார்.
இவருடன் அதே அறையில் கடந்த சில நாட்களாக கரூர் மாவட்டத்தை சேர்ந்த 22 வயதுடைய ஒரு இளம்பெண்ணும் தங்கியுள்ளார். அவர்களுக்குள் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் நட்புடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
திடீர் தாக்குதல்
அந்த பெண் விடுதியில் தங்கியிருந்தார். ஆனால் வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலையில் வித்யாஸ்ரீ படுக்கையில் படுத்திருந்த போது அந்த இளம்பெண் திடீரென்று பாய்ந்து அவரது கழுத்து பகுதியில் விரல் நகங்களால் கீறி தாக்கினார். இதை சற்றும் எதிர்பாராத வித்யாஸ்ரீ நிலைகுலைந்து அதிர்ச்சியுடன் எழுந்து அலறினார்.
அப்போது தாக்குதல் நடத்திய இளம்பெண் திடீரென சுயநினைவிழந்த நிலையில் கட்டிலில் இருந்து கீழே விழுந்தார். இதற்கிடையே சத்தம் கேட்டு விடுதியில் இருந்தவர்கள் விரைந்து வந்தனர். உடனே காயமடைந்த வித்யாஸ்ரீயை மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும், இளம்பெண்ணை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் இளம்பெண் சிகிச்சைக்கு பிறகு இயல்புநிலைக்கு திரும்பினார்.
இதனை தொடர்ந்து அவரிடம் விசாரித்த போது, ''காலையில் எழுந்து பல் துலக்குவதற்காக பிரஷ் எடுத்தது மட்டும் நினைவில் இருக்கிறது. வித்யாஸ்ரீயை தாக்கியது எதுவும் தெரியாது'' என்றார்.
போலீசில் புகார்
இந்த சம்பவம் குறித்து வித்யாஸ்ரீ மார்த்தாண்டம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த இளம்பெண் ஒரு வாலிபரை காதலித்து திருமணம் செய்ததாகவும், அவருடன் தனியாக வசிப்பதற்காக அந்த வாலிபர் வாடகைக்கு வீடு தேடி வருவதாகவும், அதுவரை விடுதியில் அவரை தங்க வைத்ததும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.