தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மீது தாக்குதல்

கோத்தகிரி அருகே அனுமதியின்றி மினி பொக்லைன் எந்திரம் இயக்கப்படுவதை தடுத்து நிறுத்திய அதிகாரிகளை தாக்கிய வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-01 19:00 GMT

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே அனுமதியின்றி மினி பொக்லைன் எந்திரம் இயக்கப்படுவதை தடுத்து நிறுத்திய அதிகாரிகளை தாக்கிய வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொக்லைன் எந்திரம்

நீலகிரி மாவட்டம் மலைப்பிரதேசமாக உள்ளதாலும், நிலச்சரிவு அபாயம் உள்ளதாலும் பொக்லைன் எந்திரங்களை பயன்படுத்தவும், பாறை கற்களை உடைக்கவும் தடை உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு பொக்லைன் எந்திரங்களை பயன்படுத்த மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற வேண்டும். இந்தநிலையில் நேற்று முன்தினம் கோத்தகிரி அருகே கேத்தரின் நீர்வீழ்ச்சி பகுதியில் தனியார் நிலத்தில் அனுமதியின்றி மினி பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி கட்டுமான பணிக்காக தேயிலை செடிகளை அகற்றுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கோத்தகிரி வருவாய் ஆய்வாளர் அருண், ஜக்கனாரை கிராம நிர்வாக அலுவலர் மேகவர்ண பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு அனுமதி பெறாமல் மினி பொக்லைன் எந்திரம் பயன்படுத்தி பணிகள் மேற்கொண்டது தெரியவந்தது. உடனடியாக எந்திரத்தை இயக்கியவர்களிடம் அனுமதியின்றி இயக்கியது தவறு. எனவே, சாவியை ஒப்படைக்குமாறு தெரிவித்து தடுத்து நிறுத்தி உள்ளனர்.

2 பேர் கைது

இதனால் ஆத்திரமடைந்த 2 வாலிபர்கள் அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் பேசி, தாக்கி கீழே தள்ளி விட்டனர். மேலும் இரும்பு கம்பியை எடுத்து அடித்து கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், காவிலோரை கிராமத்தை சேர்ந்த ஆனந்த் என்பவரது மினி பொக்லைன் எந்திரம் என்பது தெரியவந்தது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் வேம்புராஜ் (வயது 23), ராமநாதபுரத்தைச் சேர்ந்த தினேஷ் (23) ஆகியோர் அதிகாரிகளை தாக்கியதும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்கள் 2 பேர் மீது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர். வருவாய்த்துறை அதிகாரிகளை வாலிபர்கள் மிரட்டி, தாக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்