கல்லால் அடித்து வாலிபர் படுகொலை

வடமதுரை அருகே கல்லால் அடித்து வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். ரூ.37 ஆயிரத்துக்காக இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட உறவினர் கைதானார்.

Update: 2022-06-11 16:45 GMT

 கல்லால் அடித்து கொலை

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே சித்தூர்குளம் உள்ளது. தற்போது அந்த குளம் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இந்த குளத்துக்குள், தலையில் ரத்த காயங்களுடன் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், பெரும்பாறை பகுதியை சேர்ந்த மாரிமுத்து (வயது 34) என்று தெரியவந்தது. இவர், பழனியில் குதிரை வண்டி ஓட்டும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

வடமதுரையை அடுத்த செங்குளத்துப்பட்டியில் வசிக்கிற தனது தாய்மாமா செல்லத்துரையின் வீட்டுக்கு நேற்று முன்தினம் வந்தநிலையில், மாரிமுத்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். தலையில் கல்லால் அடிக்கப்பட்டு, கொடூரமான முறையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

உறவினர் கைது

இதற்கிடையே சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள குளத்தின் கரை வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதாவது மாரிமுத்துவை அவரது பெரியம்மா மகன் முனியாண்டி தீர்த்து கட்டியது தெரியவந்தது. செங்குளத்துப்பட்டியில் வசிக்கிற கார் டிரைவரான அவரை பிடித்து போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அப்போது மாரிமுத்துவை, முனியாண்டி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

ரூ.37 ஆயிரம் பணத்துக்காக...

கைதான முனியாண்டி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

செங்குளத்துப்பட்டிக்கு நேற்று முன்தினம் வந்த மாரிமுத்துவும், நானும் ஒன்றாக சேர்ந்து மதுபானம் குடித்தோம். அப்போது மாரிமுத்து தனது சட்டைப்பையில் ரூ.37 ஆயிரம் வைத்திருந்தார்.

உனக்கு எப்படி இவ்வளவு பணம் கிடைத்தது. எனக்கும், செலவுக்கு பணம் கொடு என்று மாரிமுத்துவிடம் கேட்டேன். ஆனால் அவர் பணம் தர மறுத்து விட்டார். இதனால் அந்த பணத்தை எப்படியாவது வாங்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

இதற்காக இரவில் மீண்டும் மாரிமுத்துவை மதுபானம் குடிப்பதற்காக அழைத்தேன். அவரும் வந்தார். நாங்கள் 2 பேரும் சித்தூர் குளத்துக்குள் அமர்ந்து மதுபானம் குடித்தோம். சிறிதுநேரத்தில் மதுபோதையில் மாரிமுத்து மயங்கி விட்டார்.

அதன்பிறகு அவரது தலையில் அங்கு கிடந்த கல்லால் அடித்தேன். இதில் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். பின்னர் அவர் வைத்திருந்த ரூ.37 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு சென்று விட்டேன். போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு முனியாண்டி வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

முன்னதாக கொலை குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், வேடசந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

திருட்டு வழக்குகள்

கொலை செய்யப்பட்ட மாரிமுத்துவுக்கு புஷ்பராணி என்ற மனைவியும், தனராஜ் என்ற மகனும் உள்ளனர். மாரிமுத்து மீது திண்டுக்கல், பழனி போலீஸ் நிலையங்களில் 15-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ரூ.37 ஆயிரத்துக்காக சித்தி மகனையே கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம், வடமதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்