கூடுதல் மகசூல் பெற நெற்பயிருக்கு அசோலா உரத்தை பயன்படுத்தலாம்

கூடுதல் மகசூல் பெற நெற்பயிருக்கு அசோலா உரத்தை பயன்படுத்தலாம் என வேளாண்மை விஞ்ஞானிகள் கூறினர்.

Update: 2022-07-09 18:00 GMT

கூடுதல் மகசூல் பெற நெற்பயிருக்கு அசோலா உரத்தை பயன்படுத்தலாம் என வேளாண்மை விஞ்ஞானிகள் கூறினர்.

இதுகுறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ராதாகிருஷ்ணன், கருணாகரன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அசோலா

நெற்பயிர் நட்ட பிறகு ஒரு வாரத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் 200 கிலோ அசோலாவை விட வேண்டும். அசோலா நெற்பயிருடன் சேர்ந்து நன்கு வளர்ச்சி அடைகிறது. அசோலாவை வயல்களில் விட்ட 20 முதல் 25 நாட்களில் நன்றாக வளர்ச்சி அடைந்து ஒரு ஏக்கர் நிலம் முழுவதும் பரவி விடுகிறது. தொடக்கத்தில் விடப்பட்ட அசோலா வளர்ச்சி அடைந்து 20 முதல் 25 நாட்களில் 10,000 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது.

தழை உரம்

நெற்பயிருக்கு முதல் களை எடுக்கும்போது தண்ணீரை வடிகட்டி களை எடுக்கும் ஆட்களை கொண்டு அசோலாவை வயலில் மிதித்து விடுவதன் மூலம் மக்கி தழை உரமாகிறது. அசோலாவானது மிக விரைவாக வளர்ந்து குறைந்த கால அளவிலேயே அதிகமான மகசூல் கொடுக்கின்றது. இது மற்ற எல்லா பசுந்தாள் உரப் பயிர்களையும் விட அதிகமான அளவு தழைச்சத்தை பெற்றுள்ளது.

மேலும் இது 3 முதல் 6 சதவீதம் சாம்பல் சத்தையும் கொண்டுள்ளது. அசோலாவை நெற்பயிருடன் சேர்த்து உயிர் உரமாக வளர்க்கலாம். மேலும் இதை நெல் வயலில் மிதித்து மக்க செய்து தழைச்சத்தை பெறலாம்.

கூடுதல் மகசூல்

அசோலாவை ஒரு முறை வயலில் வளர்த்த பிறகு அதுவே மீண்டும் வளர்ந்து நமக்கு உயிர் உரமாக பயன்படும். மேலும் அசோலா உரமிட்ட வயலில் களைகளும் கட்டுப்படுத்தப்படுவதால் கூடுதல் மகசூல் கிடைக்கிறது. அதிக புரதச்சத்தை கொண்டுள்ளதால் இது கால்நடை மற்றும் கோழித் தீவனமாகவும் பயன்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்