அசரீர் மலை முருகர் கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் வந்தது
காட்பாடி அருகே உள்ள அசரீர் மலை முருகர் கோவிலை இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.;
அசரீர் மலை முருகர் கோவில்
வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த 55 புத்தூர் கிராமத்தில் அசரீர் மலை முருகர் கோவில் உள்ளது. இந்த கோவிலை ஊர் பொதுமக்கள் நிர்வகித்து வந்தனர். இந்த நிலையில் முருகர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை எடுத்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. கோவிலுக்கு அறங்காவலர் குழு தலைவராக ராஜம்மாள், அறங்காவலர்களாக மணி, முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் திங்கட்கிழமை காட்பாடி தாலுகா அலுவலகத்தில் அமைதி கூட்டம் நடந்தது. அதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதனால் நேற்று இரண்டாவது கட்டமாக காட்பாடி தாலுகா அலுவலகத்தில் அமைதி கூட்டம் நடந்தது. இதற்கு 55 புத்தூர் கிராமத்தில் இருந்து பொதுமக்கள் திரண்டு வந்தனர்.
அமைதி கூட்டம்
தாலுகா அலுவலகத்தில் இது தொடர்பாக அமைதி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தாசில்தார் ஜெகதீஸ்வரன் தலைமை தாங்கினார். காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி முன்னிலை வகித்தார். காட்பாடி ஒன்றியக் குழு தலைவர் வேல்முருகன், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் மற்றும் 55 புத்தூர் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கோவில் பிரச்சினை குறித்து கலெக்டரிடம் பேசி விரைவில் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் கூறினர். அதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
பொதுமக்கள் எதிர்ப்பு
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
55 புத்தூர் கிராமத்தில் பழமை வாய்ந்த அசரீர் மலை முருகர் கோவில் உள்ளது. இதனை தர்மகர்த்தா மற்றும் ஊர் பொதுமக்கள் நிர்வகித்து வருகிறோம். இந்த நிலையில் கோவிலை அறநிலையத்துறை எடுத்துக் கொண்டதாகவும், அதற்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டதாகவும் அறிவித்துள்ளனர். இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மேலும் கோவிலின் சாவியை ஒப்படைக்க இந்து சமய அறநிலைத்துறை கூறுகிறது. சாவியை கொடுக்க மாட்டோம். நாங்கள் தான் கோவிலை நிர்வகிப்போம். அதனால்தான் கிராம மக்கள் திரண்டு வந்துள்ளோம் என்றனர்.