கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் ஆராதனை
பாவூர்சத்திரம் பகுதி கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் ஆராதனை நடைபெற்றது.
பாவூர்சத்திரம்:
கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முதல் நாளான சாம்பல் புதனில் கிறிஸ்தவர்கள் அதிலும் குறிப்பாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்களது நெற்றியில் சாம்பலால் சிலுவை அடையாளம் பூசி இயேசு கிறிஸ்துவை வழிபடுவார்கள். பாரம்பரியமாக முந்தைய வருடம் குருத்தோலை ஞாயிறு கொண்டாட்டத்தின் போது வழங்கப்படும் குருத்தோலைகளை சேகரித்து அதை எரித்து அதிலிருந்து கிடைக்கும் சாம்பலை இந்த நாளில் நெற்றியில் சிலுவை அடையாளம் பூசுவர். சாம்பல் புதனில் தொங்கி குருத்தோலை ஞாயிறு வரை 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிக்கப்படும். குருத்தோலை ஞாயிறுக்கு பிறகு புனித வாரம் கடைபிடிக்கப்படும். ஏப்ரல் 9-ந் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அதன்படி பாவூர்சத்திரம் புனித அந்தோணியார் தேவாலயத்தில் பங்குத்தந்தை ஜேம்ஸ்அடிகளார் சாம்பல் புதன் சிறப்பு ஆராதனை நடத்தினார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் சபை மக்கள் அனைவருக்கும் சாம்பலால் சிலுவை அடையாளம் பூசினார். சி.எஸ்.ஐ. கிறிஸ்து ஆலயத்தில் சேகர குருவானவர் டேனியல் தனசன் சாம்பல் புதன் சிறப்பு ஆராதனை நடத்தினார். அதிகாலையில் நடைபெற்ற இந்த ஆராதனைகளில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதேபோல் பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.