ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் 100 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை வார்டு டீன் பிரின்ஸ் பயஸ் தகவல்

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் 100 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை வார்டு தயார் நிலையில் உள்ளது என்று டீன் பிரின்ஸ் பயஸ் கூறினார்.

Update: 2023-03-29 22:15 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் 100 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை வார்டு தயார் நிலையில் உள்ளது என்று டீன் பிரின்ஸ் பயஸ் கூறினார்.

கொரோனா பரவலா?

உலகம் முழுவதும் கொத்து, கொத்தாக உயிர்களை காவு வாங்கிய கொரோனா வைரஸ் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக வெகுவாக குறைந்தது. இதனால் பெரிய அளவில் பாதிப்பும், உயிர்ப்பலியும் இல்லாமல் இருந்தது. மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் சற்று அதிகரித்து வருகிறது.

குமரி மாவட்டத்திலும் வாரத்துக்கு 5-க்கும் கீழாக இருந்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக நாள் ஒன்றுக்கு 7 வரை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 6 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஆலோசனைக் கூட்டம்

இதையடுத்து குமரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று முன்தினம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு டீன் பிரின்ஸ் பயஸ் தலைமை தாங்கினார். ஆஸ்பத்திரி சூப்பிரண்டு அருள்பிரகாஷ், உறைவிட மருத்துவ அதிகாரி ஜோசப்சென், உதவி உறைவிட மருத்துவ அதிகாரிகள் விஜயலெட்சுமி, ரெனிமோள் மற்றும் துறைத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தயார் நிலையில் கொரோனா வார்டு

கூட்டத்தில் டீன் பிரின்ஸ்பயஸ் கூறியதாவது:-

கொரோனா பரவல் அதிகமாக இல்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பாதிப்பு அதிகமாக ஏற்படும் பட்சத்தில் சிகிச்சை அளிக்க வசதியாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த பகுதியில் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 100 படுக்கைகளுடன் இந்த வார்டு தயார் நிலையில் உள்ளது. தேவைப்படும் பட்சத்தில் படுக்கைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

மேலும் காய்ச்சல் புறநோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதுதவிர காய்ச்சல் வார்டும் தனியாக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று அழிக்காலை சேர்ந்த ஒருவர் கொரோனா வார்ட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிப்பு கண்டறியப்பட்ட பெரும்பாலான நபர்கள் வீடுகளில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பரவும் பட்சத்தில் நோயாளிகளுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

--

Tags:    

மேலும் செய்திகள்