செயற்கை நீரூற்றில் ஆனந்த குளியல் போட்ட ஆசாமி
செயற்கை நீரூற்றில் ஆசாமி ஆனந்த குளியல் போட்டார்.;
திருச்சி:
திருச்சி கண்டோன்மெண்ட் வில்லியம்ஸ் சாலையில் சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் எதிர்புறம், மறைந்த பாரத பிரதமர் ஜவஹர்லால்நேருவின் முழு உருவச்சிலை நிறுவப்பட்டு உள்ளது. இந்த சிலையின் முன்பு அழகுக்காக செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டு, அதை சுற்றிலும் இரும்பு கம்பியால் வேலி போடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மின்விளக்குகளின் ஒளியால் இந்த செயற்கை நீரூற்று பல்வேறு வண்ணங்களில் மாறிக்கொண்டே இருக்கும். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்றை அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ரசித்து பார்த்து செல்வார்கள்.
இந்தநிலையில் நேற்று மாலை சுமார் 30 வயதுடைய ஒருவர் இரும்பு கம்பி வேலியை தாண்டி ஏறி குதித்து அந்த செயற்கை நீரூற்றில் அரை நிர்வாண கோலத்தில் ஆனந்த குளியல் போட தெடங்கினார். இதை கண்ட அந்த பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த ஆசாமியை அங்கிருந்து விரட்டினர். உடனே அவர் கீழே இறங்கி வந்து சற்று தூரம் நடந்து சென்று திடீரென நடுரோட்டில் அமர்ந்தார். உடனே இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று அவரை விரட்டியடித்தனர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.