மத வழிபாட்டு தலங்களில் பணம் வசூலித்து உல்லாசமாக வாழ்ந்த ஆசாமி

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான ஆசாமி, மத வழிபாட்டு தலங்களில் பணம் வசூலித்து உல்லாசமாக வாழ்ந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Update: 2022-11-25 18:45 GMT

ஊட்டி

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான ஆசாமி, மத வழிபாட்டு தலங்களில் பணம் வசூலித்து உல்லாசமாக வாழ்ந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

வெடிகுண்டு மிரட்டல்

நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித்துக்கு கடந்த ஜூலை மாதம் 26-ந் தேதி செல்போனில் குறுந்தகவல் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிலிப் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் தஞ்சாவூர் பஸ் நிலையம் அருகே தனியார் விடுதியில் தங்கி இருப்பது தெரியவந்தது. உடனே அங்கு ஊட்டி மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிக்குமார் தலைமையிலான போலீசார் சென்று, அவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர், டெல்லியை சேர்ந்த நிதின் சர்மா(வயது 40) என்பது தெரியவந்தது. தொடர்ந்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து, ஊட்டி ஜூடிசியல் கோர்ட்டு நீதிபதி தமிழினியன் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

உல்லாச வாழ்க்கை

முன்னதாக அவருக்கு, வேறு ஏதும் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதா? என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பது போன்று தெரியவில்லை. அதே சமயத்தில் இந்தியாவில் உள்ள டெல்லி, அரியானா, கேரளா, ராஜஸ்தான், பாண்டிச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களிலும் குற்ற வழக்குகளில் கைதாகி சிறையில் இருந்தது தெரியவந்தது.

இது தவிர பல்வேறு வழிபாட்டு தலங்களுக்கும் சென்று அந்தந்த மதத்திற்கு சமீபத்தில் தான் மாறி விட்டதாக கூறி, அங்குள்ளவர்களிடம் பணம் வசூல் செய்து உல்லாசமாக வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். குறிப்பாக முஸ்லிம் மதத்திற்கு மாறியதாகவும், வேலை ஏதும் இல்லாததால் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் இருப்பதாகவும் கூறி தர்காக்களில் கிடைக்கும் பணத்தை வைத்து வாழ்க்கையை நடத்தியுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்