கோர்ட்டு வழங்கிய அவகாசம் முடிந்ததால் கிராவல் மண் குவாரி செயல்பட தடை

கிராவல் மண் எடுக்க வழங்கிய அவகாசம் முடிந்த பின்பும் சட்டவிரோதமாக மண் அள்ளிய குவாரி செயல்பட தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-09-28 20:53 GMT

கிராவல் மண் எடுக்க வழங்கிய அவகாசம் முடிந்த பின்பும் சட்டவிரோதமாக மண் அள்ளிய குவாரி செயல்பட தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

குவாரியைஎதிர்த்து ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகா கப்பிகுளம் பகுதியைச் சேர்ந்த பாபு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா மூலக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட புளியங்குளம் கண்மாயில் குவாரி அமைத்து, கிராவல் மண் எடுக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டது. திருச்செந்தூரில் இருந்து அம்பாசமுத்திரம் வரை ்சாலை அமைப்பதற்கு இந்த கிராவல் மண்ணை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் சாலை அமைக்க மட்டுமல்லாமல், இரவும், பகலும் புளியங்குளம் கண்மாயில் இருந்து கிராவல் மண்ணை அள்ளிச்சென்றனர்.

இதற்காக கண்மாயில் இருந்த பாசனத்திற்கு தேவையான தண்ணீரையும் வெளியேற்றினர். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து குவாரிக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் பாதிப்பு

கண்மாயில் அளவில்லாமல் கிராவல் மண் அள்ளுவதால் கிராம மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, 2 மாதம் மட்டும் அவகாசம் அளிப்பதாக கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. அந்த அவகாசம் முடிந்தும் பல மாதங்களாக குவாரியில் கிராவல் மண் சட்டவிரோதமாக அள்ளப்பட்டு வருகிறது. எனவே புளியங்குளம் கண்மாயில் குவாரி செயல்பட தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

குவாரி செயல்படத் தடை

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் பினேகாஸ் ஆஜராகி, அனுமதிக்கப்பட்ட காலம் முடிந்து பல மாதங்களாக புளியங்குளம் கண்மாயில் கிராவல் மண் அள்ளப்பட்டு வருகிறது. இதை தடுக்க கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாதாடினார்.

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் குவாரிக்கான உரிமம் உள்ளது என்றார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், கால அவகாசம் முடிந்த பின்பும் குவாரி செயல்படுவது ஏற்புடையதல்ல என்றனர்.

பின்னர், அந்த குவாரி செயல்பட இடைக்கால தடை விதிக்கிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

==============

Tags:    

மேலும் செய்திகள்