தியேட்டர் கதவை இழுத்து மூடியதால் போலீசார், ரசிகர்கள் இடையே தள்ளு, முள்ளு

திண்டுக்கல்லில், நள்ளிரவு சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுத்து தியேட்டர் கதவை இழுத்து மூடியதால் போலீசார், ரசிகர்கள் இடைேய தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

Update: 2023-01-11 18:45 GMT

அஜித், விஜய் படங்கள்

பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் அஜித் நடித்த துணிவு, நடிகர் விஜய் நடித்த வாரிசு ஆகிய திரைப்படங்கள் நேற்று அதிகாலை முதல் திண்டுக்கல்லில் உள்ள தியேட்டர்களில் திரையிடப்பட்டது. ஒரே நாளில் இருவரின் படங்களும் வெளியானதால் உற்சாகமடைந்த அஜித், விஜய் ரசிகர்கள் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் வாழ்த்து பேனர்களை வைத்தனர்.

மேலும் படங்கள் வெளியாகும் தியேட்டர்கள் முன்பும் வாழ்த்து பேனர்கள் இடம்பெற்றன. அதேபோல் அடுத்தடுத்து அமைந்துள்ள தியேட்டர்களில் அஜித், விஜய் படங்கள் திரையிடப்பட்டுள்ளதால் அந்த தியேட்டர்கள் முன்பும் அஜித், விஜய் ரசிகர்கள் இணைந்து வரவேற்பு பேனர்களை வைத்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அஜித், விஜய் ரசிகர்கள் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தியேட்டரில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து இருந்தனர்.

நள்ளிரவு காட்சி

மேலும் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக நள்ளிரவில் தியேட்டர் முன்பு ரசிகர்கள் திரண்டனர். பின்னர் அவர்களுக்கான டிக்கெட்டுகள் பரிசோதனை செய்யப்பட்டு தியேட்டருக்குள் செல்ல ஊழியர்கள் அனுமதித்துக்கொண்டிருந்தனர். அப்போது போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுல கிருஷ்ணன் தலைமையில் போலீசார் அந்த தியேட்டருக்கு வந்தனர்.

பின்னர் நள்ளிரவு காட்சியை திரையிட அனுமதி இல்லை. எனவே ரசிகர்களை வெளியேற்றிவிட்டு காலை 8 மணி முதல் படங்களை திரையிடுங்கள் என தியேட்டர் ஊழியர்களிடம் தெரிவித்தனர். மேலும் திரையரங்குக்குள் சென்ற ரசிகர்களை வெளியேற்றிவிட்டு தியேட்டர் கதவுகளை போலீசார் இழுத்து மூடினர்.

வாக்குவாதம்

பின்னர் ரசிகர்களை கலைந்து செல்லும்படியும் காலை 8 மணிக்கு மேல் வந்து அஜித், விஜய் படங்களை கண்டு ரசிக்கும்படியும் போலீசார் அறிவுறுத்தினர். தியேட்டரை விட்டு வெளியேற்றியதால் ஆத்திரத்தில் இருந்த ரசிகர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து உடனடியாக படங்களை திரையிடும்படி கோஷமிட்டனர். மேலும் தியேட்டரின் நுழைவு வாயிலில் இருந்த கிரில் கதவில் இருந்த பூட்டையும் உடைத்துக்கொண்டு தியேட்டருக்குள் செல்ல முயன்றனர்.

இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்தனர். அப்போது போலீசாருக்கும், அஜித், விஜய் ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அது தள்ளு, முள்ளாக மாறியது. பின்னர் ரசிகர்களுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து தியேட்டருக்குள் சென்று அஜித், விஜய் படங்களை பார்க்கவும் போலீசார் அனுமதித்தனர்.

போலீஸ் விசாரணை

இதையடுத்து முண்டியடித்துக்கொண்டு தியேட்டருக்குள் அஜித், விஜய் ரசிகர்கள் சென்றனர். பின்னர் நள்ளிரவு 2 மணி அளவில் அஜித் நடித்த துணிவு படம் திரையிடப்பட்டது. பின்னர் அதிகாலை 4.30 மணி அளவில் விஜய் நடித்த வாரிசு படம் திரையிடப்பட்டது. 2 படங்களை பார்ப்பதற்காக தியேட்டரில் குவிந்த ரசிகர்கள் பலருக்கு அமர இருக்கை கிடைக்கவில்லை.

அவர்கள் தரையில் அமர்ந்தும், நின்றபடியும் சினிமாவை பார்த்து ரசித்தனர். 2 படங்களுக்கான டிக்கெட்டுகளை சிலர் போலியாக தயாரித்து வந்ததால் தான் தியேட்டரில் அமர இடம் கிடைக்கவில்லை என்று புகார் எழுந்தது. அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தியேட்டரில் போலீசாருடன் ரசிகர்கள் வாக்குவாதம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்