மத்திய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதல்

தொடர் விடுமுறை முடிவடைந்ததால் மத்திய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Update: 2023-10-02 20:59 GMT

தொடர் விடுமுறை

திருச்சி மத்திய பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தென் மாவட்ட பகுதிகளில் உள்ள ஊர்களுக்கு செல்லும் பயணிகள் திருச்சி வந்துதான் வெளியூர் செல்வார்கள். இதனால் அரசு விடுமுறை நாட்கள், விழாக்காலங்கள் உள்ளிட்ட நாட்களில் மத்திய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும்.

இந்தநிலையில் கடந்த மாதம் 27-ந்தேதி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு முதல் பருவ தேர்வு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் 28-ந்தேதி மிலாதுநபி, பின்னர் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள், நேற்று காந்தி ஜெயந்தி என்று தொடர்ந்து விடுமுறை நாட்கள் வந்தன.

சிறப்பு பஸ்கள்

இதனால் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் பகுதி பொதுமக்கள் தென் மாவட்ட பகுதிகளில் உள்ள சொந்த ஊருக்கு சென்றனர். மேலும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் திருச்சி உள்ளிட்ட மாவட்ட பகுதிகளுக்கு வந்தனர். நேற்றுடன் விடுமுறை முடிந்ததால் சொந்த ஊருக்கு சென்றவர்கள் மற்றும் வெளியூர்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் நேற்று ஊர் திரும்பினர். இதற்காக நேற்று திருச்சி மத்திய பஸ் நிலையத்துக்கு வந்தனர். இதனால் மாலை 6 மணி முதல் பஸ் நிலையம் பொதுமக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

பயணிகள் போட்டி போட்டுக்கொண்டு பஸ்களில் இடம் பிடிக்க குவிந்தனர். இதைத்தவிர, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து திருச்சிக்கு வந்த பொதுமக்கள் நேற்று ஊருக்கு திரும்பியதால் பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. மேலும் பஸ்சுக்காக நீண்ட நேரம் பயணிகள் காத்திருந்தனர். நேற்று பகலிலும், இரவிலும் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்