திருமணம் நடைபெறாததால் முன்பதிவு தொகையை உரியவரிடம் மண்டப உரிமையாளர் வழங்க வேண்டும்- சேலம் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

திருமணம் நடைபெறாததால் முன்பதிவு தொகையை உரியவரிடம் மண்டப உரிமையாளர் வழங்க வேண்டும் என்று சேலம் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2023-02-16 21:47 GMT

சேலம் ரெட்டிப்பட்டி என்ஜினீயர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் ஆசைத்தம்பி. இவருடைய மகனுக்கு திருமணம் நடத்த கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந்தேதி சேலத்தில் ஒரு திருமண மண்டபத்தை முன்பதிவு செய்தார். இதற்காக 2 தவணைகளில் ரூ.94 ஆயிரத்து 400-ஐ மண்டப உரிமையாளரிடம் வழங்கி உள்ளார். இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மண்டபத்தில் திருமண நடைபெறவில்லை. இதைத்தொடர்ந்து கட்டிய பணத்தை திரும்ப கேட்டு உள்ளார். அப்போது 25 சதவீதம் பிடித்தம் செய்து ரூ.70 ஆயிரத்து 800 கொடுத்து உள்ளனர். மீதி பணத்தை பெற்றுத்தரும்படி, ஆசைத்தம்பி, தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டி தலைவர் வக்கீல் எஸ்.செல்வம், மூலம் சேலம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அதில் ஆசைத்தம்பிக்கு திருப்பி செலுத்த வேண்டிய ரூ.23 ஆயிரத்து 600 மற்றும் மன உளைச்சல், சேவை குறைபாடு, செலவுத்தொகை ரு.5 ஆயிரம் சேர்த்து 2 மாதத்தில், திருமண மண்டப உரிமையாளர் வழங்க வேண்டும் என்று நீதிபதி கணேஷ்ராம், உறுப்பினர் ரமோலா ஆகியோர் தீர்ப்பு அளித்தனர்.

மேலும் செய்திகள்