வெள்ளப்பெருக்கின் போது தரைப்பாலம் மூழ்குவதால் உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு
வெள்ளப் பெருக்கின் போது தரைப்பாலம் மூழ்குவதால் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
நெகமம்
வெள்ளப் பெருக்கின் போது தரைப்பாலம் மூழ்குவதால் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
தரைப்பாலம்
கோவை மாவட்டம் செட்டியக்காபாளையத்தில் இருந்து நெகமம் செல்லும் ரோட்டில் தேவணாம்பாளையம் உள்ளது. இந்தப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு சிற்றாறு செல்கிறது. இந்த சிற்றாறு கிணத்துக்கடவு ஒன்றியம், தேவணாம்பாளையத்தில் இருந்து சூலக்கல் வழியாக கேரளாவிற்கு செல்கிறது. இந்த ஆற்றில் தேவணாம்பாளையத்தில் தரைமட்டப் பாலம் மட்டுமே உள்ளது.
இந்த பாலத்தின் வழியாக கிணத்துக்கடவில் இருந்து செட்டியக்காபாளையம், தேவணாம்பாளையம், கப்பளாங்கரை, கோப்பனூர் புதூர், நெகமம், பல்லடம், திருப்பூர், பொள்ளாச்சி மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு அதிகளவில் வாகனங்கள் வந்து செல்கிறது.
வெள்ளத்தில் மூழ்குகிறது
மேலும் இந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட நார்த்தொழிற்சாலைகள், பிளாஸ்டிக் தொழிற்சாலை, இரும்பு தொழிற்சாலை உள்ளது. அதனால் இந்த ரோட்டில் எப்போதும் வாகனங்கள் வந்து செல்கின்றன. மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் தரைப்பாலம் மூழ்குகிறது. இதனால் இந்த சிறிய தரைப்பாலத்தின் மீது வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. அதனால் தொழில்கள் பாதிக்கப்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் தேவணாம்பாளையம் ஆற்றில் ஆய்வு செய்து தரைமட்ட பாலத்தை உயர் மட்ட பாலமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.