நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகளாக பா.ம.க. சார்பில் 6 நாட்கள் தொடர் நிகழ்ச்சிகள்: டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகளாக பா.ம.க. சார்பில் 6 நாட்கள் தொடர் நிகழ்ச்சிகள் நடத்த உள்ளதாக டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்திட்டத்தின்படி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் அக்டோபர் மாதத் தொடக்கத்தில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 6 நாட்களுக்கு தொடர் நிகழ்ச்சிகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து அமைப்பு மாவட்டங்களிலும் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடத்தப்படும்.
அக்டோபர் 2-ந் தேதி திங்கட்கிழமை அனைத்து கிராமங்கள், நகரங்கள் மற்றும் பேரூர்களில் பா.ம.க. கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அக்டோபர் 3-ந் தேதி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும். கிராம அளவிலான கட்சிக் கூட்டங்கள் அக்டோபர் 4-ந் தேதி நடத்தப்படும். அக்டோபர் 5-ந் தேதி அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் அளவில் மோட்டார் சைக்கிள் பேரணிகள் நடத்தப்படும்.
அக்டோபர் 8-ந் தேதி ஒன்றிய, நகர, பேரூர் அளவிலான கூட்டங்கள் நடத்தப்படும். அனைத்துக் கூட்டங்களிலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான செயல் திட்டங்கள், வாக்குச்சாவடி களப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பணித் திட்டங்கள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.