முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 ரவுடிகள் கைது மாவட்டம் முழுவதும் 1,400 போலீசார் பாதுகாப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சரித்திர பதிவேடு கொண்ட 20 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-14 13:20 GMT


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சரித்திர பதிவேடு கொண்ட 20 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

20 ரவுடிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையின் போது எந்த வித குற்ற சம்பவங்கள் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் கடந்த 5 நாட்கள் ரவுடிகள் வேட்டை நடத்தப்பட்டது. இதில் சரித்திர பதிவேடு கொண்ட 20 ரவுடிகள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும், 2 ரவுடிகள் மீது குண்டர் சட்டத்திலும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

அத்துடன் 48 ரவுடிகளின் மீது 110 குற்ற விசாரணை நடைமுறை சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களின் நடத்தையை கட்டுப்படுத்த வேண்டி கோட்டாட்சியர் முன்பு ஆஜர் செய்து நன்னடத்திற்கான பிணைய ஆணை பெறப்பட்டு உள்ளது. மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு வரும் பயணிகளின் பாதுகாப்பிற்காக ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையங்களில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பஜார் வீதிகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களான பூங்காக்கள், சாத்தனூர் அணை, வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத்தளங்கள் ஆகிய இடங்களில் திருட்டு குற்றங்கள் ஏற்படுவதை தடுக்க போலீசார் சாதாரண உடையில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

1400 போலீசார்

பொங்கல் பண்டிகை நாட்களில் சாலை விபத்துகளை குறைக்க தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அதிகம் நிகழும் 70 இடங்களை அடையாளம் கண்டு அங்கு வாகன சோதனையில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட சட்டம் ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு நெடுஞ்சாலைகளில் தனித்தனியே குறிப்பிட்ட தூரம் ஒதுக்கப்பட்டு அதில் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கிராமங்களில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடக்கும் போது எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள மாவட்டம் முழுவதும் 32 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 45 மோட்டார் சைக்கிள்களில்

போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் எவ்வித அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் கொண்டாட திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் மாவட்டம் முழுவதிலும் கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் 12 துணை போலீஸ் சூப்பரண்டுகள் தலைமையில் 1400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்