அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா: மலை உச்சியில் நாளை மகாதீபம் ஏற்றப்படுகிறது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி 2,668 அடி உயர மலை உச்சியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மகாதீபம் ஏற்றப்படுகிறது.

Update: 2022-12-04 22:42 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தீப திருவிழா கோவிலின் வளாகத்திற்குள் பக்தர்களின்றி நடைபெற்றது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டு உள்ளதால் இந்த ஆண்டு தீபத் திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது.

அதன்படி இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதனை முன்னிட்டு நாளை அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற உள்ளது.

மலை உச்சியில் மகாதீபம்

அதிகாலை 4 மணிக்கு சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்படும். இதையடுத்து பிரம்ம தீர்த்தத்தில் சுப்ரமணியர் சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும்.

மாலையில் பஞ்சமூர்த்திகள், சாமி சன்னதி முன்பாக எழுந்தருள்வார்கள். அதைத்தொடர்ந்து 6 மணிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்படும். அதேநேரத்தில் மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். அப்போது கோவிலில் கூடியிருக்கும் பக்தர்கள் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என்ற பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்வார்கள். மகாதீபத்தை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். மகா தீபம் ஏற்றியதும் கிரிவலப்பாதையில் இருக்கும் பக்தர்கள் மலையை நோக்கி மகாதீபத்தை வணங்குவார்கள். மகாதீபம் ஏற்றப்படும் நாளில் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் மலையில் தீபம் ஏற்றும் வரை தங்கள் வீடுகளிலோ, வியாபார நிறுவனங்களிலோ மின்விளக்குகள் போடமாட்டார்கள். அதன்பின்னரே ஏற்றுவார்கள்.

12 ஆயிரம் போலீசார்

பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் சென்னை உள்ளிட்ட இடங்களிலிருந்து சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகின்றன.

இவை இன்று (திங்கட்கிழமை) முதல் இயக்கப்பட உள்ளது. அதனால் இன்று முதல் திருவண்ணாமலை நகர் முழுவதும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழியும்.

பாதுகாப்பு பணிக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் சுமார் 12 ஆயிரம் போலீசார் திருவண்ணாமலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்