அருணாசலேஸ்வரர் கோவிலில் சர்ச்சைக்குரிய கவரில் விபூதி பிரசாதம் வழங்கிய 2 அர்ச்சகர்கள் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சர்ச்சைக்குரிய கவரில் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கிய 2 அர்ச்சகர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2023-05-02 17:24 GMT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சர்ச்சைக்குரிய கவரில் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கிய 2 அர்ச்சகர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

சாமி தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இதில் சாமி சன்னதியில் தரிசனம் செய்த பிறகு விபூதி பிரசாதத்தை அர்ச்சகர்கள் வழங்குகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவிலில் சாமி சன்னதியில் கொடுக்கப்பட்ட விபூதி பிரசாத கவரில் திருவண்ணாமலையைச் சேர்ந்த துணிக்கடை பெயருடன், 'அன்னை தெரசா' புகைப்படம் அச்சடிக்கப்பட்டு இருந்தது.

இந்த கவருடன் விபூதி பிரசாதம் வினியோகிக்கப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த கவரின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவின்பேரில் அருணாசலேஸ்வரர் கோவில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் இக்கோவிலில் முறை அர்ச்சகர் மற்றும் ஸ்தானீகமாக பணிபுரியும் சோமநாத குருக்கள் மற்றும் முத்துகுமாரசாமி குருக்கள் ஆகியோர் கோவில் நிர்வாகத்திற்கு தெரியாமல் உபயதாரர் மூலம் வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய கவரில் விபூதி, குங்குமம் பிரசாத கவரினை பக்தர்களுக்கு வழங்கியது தெரியவந்தது.

பணியிடைநீக்கம்

இதையடுத்து அவர்கள் இருவரையும் கோவில் இணை ஆணையர் குமரேசன் 6 மாத காலத்திற்கு முறை அர்ச்சகர் மற்றும் ஸ்தானீகம் பணியிலிருந்து பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.

இதனிடையே சர்ச்சைக்குரிய விபூதி கவர் குறித்து திருவண்ணாமலை மாவட்ட இந்து முன்னணி சார்பில் மாவட்ட தலைவர் அருண்குமார் தலைமையிலானோர் அருணாசலேஸ்வரர் கோவிலில் இணை ஆணையர் அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் போலீசார் மற்றும் கோவில் பணியாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்