ஜெ. மரணம் குறித்த அறிக்கை.." - அரசியல்வாதி அறிக்கை போல் உள்ளது - டிடிவி தினகரன் விமர்சனம்
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை என்பது, ஒரு அரசியல்வாதியின் அறிக்கையைப்போல் உள்ளது என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.;
திருப்பத்தூர்,
மருதுபாண்டியரின் 221-வது நினைவு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள மருது சகோதரர்களின் உருவச் சிலைகளுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன் கூறியதாவது;-
முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை என்பது, ஒரு அரசியல்வாதியின் அறிக்கையைப்போல் உள்ளது.
இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை மிகவும் தவறானது. மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் ஆகியோரின் மரியாதையை குலைக்கும் வகையில் உள்ளது" என்றார்.
மேலும் எடப்பாடி பழனிசாமி நிதானம் இன்றி பேசுவதாக விமர்சித்த டிடிவி தினகரன், ஒரு முதல் அமைச்சராக இருந்தவர்; அவர் வயதுக்கு இப்படியெல்லாம் நடந்து கொள்ளக் கூடாது. எடப்பாடி காட்டுமிராண்டி போல நடந்து கொள்கிறார். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு யார் அனுமதி கொடுத்தார்கள் என்று விசாரித்து எந்த பதவியில் இருந்தவர்கள் என்றாலும் அவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தூத்துக்குடி மக்களின் கோரிக்கையாக உள்ளது. அதை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்" என்றார்.