ஆறுமுகநேரியில்100 விநாயகர் சிலைகள் ஊர்வலம்
ஆறுமுகநேரியில் 100 விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரியிலிருந்து நேற்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட 100 விநாயகர் சிலைகள் திருச்செந்தூர் கடலில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
ஆறுமுகநேரி நகர இந்து முன்னணி சார்பில் 32-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 16-ந்தேதி தொடங்கியது. அன்று இரவு 11 அடி உயர விநாயகர் சிலை ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு ஆறுமுகநேரி மெயின் பஜாரிலுள்ள செந்தில் விநாயகர் கோவில் முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அங்கு விநாயகர் சிலைக்கு தினமும் காலை, மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மேலும் தினமும் மாலையில் சொற்பொழிவு, பக்தி இசை கச்சேரிகள் நடைபெற்றன. தொடர்ந்து ஆறுமுகநேரியிலுள்ள 25 அம்மன் கோவில்கள் முன்பும், பல்வேறு இடங்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
ஊர்வலம்
செந்தில் விநாயகர் கோவிலில் நேற்று காலையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அங்கிருந்து விநாயகர் சிலை ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்துக்கு திருச்செந்தூர் வடக்கு ஒன்றிய இந்து முன்னணி தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். இதில் பாண்டிச்சேரி மாநில இந்து முன்னணி செயலாளர் அ.வ.சனில்குமார், ஆறுமுகநேரி ஐக்கிய வியாபாரிகள் சங்கத் தலைவர் தாமோதரன், அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் செந்தமிழ் செல்வன், இந்து வியாபாரிகள் சங்க தலைவர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 100 விநாயகர் சிலைகள் 60 வாகனங்களில் திருச்செந்தூருக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன.
கடலில் கரைப்பு
ஊர்வலம் ஆறுமுகநேரி பஜார், பேயன் விளை, லட்சுமி புரம் ரத்தினபுரி, காயல்ப்பட்டனம் புதிய பஸ் நிலையம், விசாலாட்சி அம்மன் கோவில் தெரு, பூந்தோட்டம் ஓடக்கரை வழியாக திருச்செந்தூர் சென்றடைந்தது. போலீஸ் துணை சூப்பிரண்டுகள் வசந்த் ராஜன், மாயவன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வழிநெடுகிலும் சாலைகளில் விநாயகருக்கு தேங்காய் உடைக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. திருச்செந்தூர் கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகள், அங்கு கடலில் கரைக்கப்பட்டன.