அரும்பாக்கத்தில் நகை வியாபாரியை தாக்கி ரூ.29 லட்சம் நகை-பணம் கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
அரும்பாக்கத்தில் நகை வியாபாரியை தாக்கி ரூ.29 லட்சம் நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டது.;
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேஷ் குமார் ஜெயின். சென்னை கொருக்குப்பேட்டையில் வசித்து வரும் இவர், தங்க நகை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நகை கடை உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் தங்கத்தை அவர்கள் கேட்கும் டிசைனுக்கு ஏற்ப கோயமுத்தூரில் உள்ள நகை பட்டறையில் தயார் செய்து காஞ்சீபுரம் பகுதியில் விற்பனை செய்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை காஞ்சீபுரம் சென்று புதிய டிசைன்களில் செய்யப்பட்ட தங்க நகை 420 கிராம் (52பவுன்) மற்றும் ரூ.6 லட்சத்து 25 ஆயிரம் பணத்துடன் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்தார்.
பின்னர் அங்கிருந்து தன்னுடைய இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அரும்பாக்கம், திருவீதி அம்மன் கோவில் சந்திப்பில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த இருவர் ராஜேஷ்குமார் ஜெயினை வழிமறித்தனர். பின்னர் அவரை கீழே தள்ளி தாக்கி அவர் வைத்திருந்த 420 கிராம் தங்க நகை மற்றும் ரூ.6 லட்சத்து 25 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர்.
இந்த வழிப்பறி சம்பவத்தில் காயம் அடைந்த ராஜேஷ்குமார் ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து ராஜேஷ் குமார் ஜெயின் அளித்த புகாரின் பேரில், அரும்பாக்கம் போலீசார் கொள்ளை சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர். பரபரப்பு மிகுந்த பூந்தமல்லி சாலையில் நகை வியாபாரியை தாக்கி கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.