தங்க கவச அலங்காரத்தில் காட்சியளித்த நடராஜர்

ராமேசுவரம் கோவிலில் நடந்த திருவாதிரை ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு நடராஜர் காட்சியளித்தார்.

Update: 2023-01-06 18:45 GMT

ராமேசுவரம், 

ராமேசுவரம் கோவிலில் நடந்த திருவாதிரை ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு நடராஜர் காட்சியளித்தார்.

ஆருத்ரா தரிசனம்

ராமேசுவரம் கோவிலில் ஆண்டுதோறும் திருவாதிரை ஆருத்ரா திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். அது போல் இந்த ஆண்டின் ஆருத்ரா திருவிழாவானது கடந்த மாதம் 28-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழா தொடங்கியதில் இருந்து தினமும் மூன்றாம் பிரகாரத்தில் ருத்ராட்ச மண்டபத்தில் வீற்றிருக்கும் நடராஜர்-சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்ததுடன் தங்க கேடயத்தில் மாணிக்கவாசகர் உலாவரும் நிகழ்ச்சியும் நடந்தது.

இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் நடந்து வரும் ஆருத்ரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருவாதிரை ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 3 மணி அளவில் மூன்றாம் பிரகாரத்தில் ருத்ராட்சை மண்டபத்தில் அமைந்திருக்கும் நடராஜர்-சிவகாமி அம்பாளுக்கு பால், பன்னீர், திரவியம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நடராஜர்-சிவகாமி அம்பாளுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு ஏராளமான மலர்களாலும் அலங்காரம் செய்து சிறப்பு தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன.

வீதி உலா

ராமேசுவரம் கோவிலில் நேற்று நடந்த இந்த ஆருத்ரா தரிசனத்தை காண ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். இதனால் மூன்றாம் பிரகாரம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்ஜியன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீராம் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பக்தர்களை ஒழுங்குபடுத்தி வரிசையாக நடராஜர் சன்னதிக்கு தரிசனம் செய்ய அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து காலை 10 மணி அளவில் நடராஜர் சிவகாமி அம்பாள் ஏக சிம்மாசனத்தில் கோவில் ரத வீதிகளை சுற்றி உலாவரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு சுவாமி-அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது.

சிறப்பு அபிஷேகம்

இதேபோல் சீதா தீர்த்தம் அருகே உள்ள நடராஜர் கோவிலில் உள்ள நடராஜர் சிவகாமி அம்பாளுக்கும் நேற்று காலை பால், பன்னீர், திரவியம், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகளும் நடைபெற்றன.

இந்த ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில் தமிழக விசுவஹிந்து பரிஷத் நிறுவனதலைவர் வேதாந்தம் ஜி, விசுவ இந்து பரிஷத் மண்டல அமைப்பாளர் சரவணன், விசுவ இந்து பரிஷத் மாநில இணை பொது செயலாளர் மற்றும் கோசுவாமிமட மேலாளர் ராமசுப்பு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்