சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்
தென்காசி மாவட்டத்தில் சிவன் கோவில்களில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.;
தென்காசி மாவட்டத்தில் சிவன் கோவில்களில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குற்றாலநாத சுவாமி
தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவாதிரை திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று திருவாதிரை ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை முதலே கோவிலுக்கு பக்தர்கள் வர தொடங்கினர். காலை 4 மணிக்கு சித்திர சபையில் நடராஜருக்கு தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து 6 மணிக்கு கோவிலின் திரிகூட மண்டபத்தில் நடராஜ பெருமானுக்கு தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கண்ணதாசன் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் திருவாதிரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று கோ பூஜை, சிறப்பு அபிஷேகம், தாண்டவ தீபாராதனையை தொடர்ந்து நடராஜர் ஆருத்ரா தரிசனம் நடந்தது. பின்னர் சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் திருவாலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நடராஜருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ருத்ர ஜெபம், 108 சங்காபிசேகம் ஆகியனவும், தொடர்ந்து ஆருத்ரா தரிசனம், கோபூஜை, சிறப்பு தீபாராதனை, திருவெண்பா பாராயணம் நடைபெற்றது.
தோரணமலை
தோரணமலை முருகன் கோவிலில் நடராஜருக்கு திருவாதிரை ஆருத்ரா தரிசன பூஜை நடைபெற்றது. முன்னதாக அதிகாலையில் மலை அடிவாரத்தில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே நடராஜருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், தாண்டவ தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு மலையை சுற்றி கிரிவலம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.