சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா
தியாகதுருகம், ரிஷிவந்தியம் பகுதி சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா;
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே உள்ள நஞ்சுண்ட தேசிக ஈஸ்வரர் கோவில் வளாகத்தில் நேற்று ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் நடராஜர், சிவகாமசுந்தரிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சாமி வீதிஉலா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
அதேபோல் ரிஷிவந்தியம் முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மூலவர் சுயம்புலிங்கத்துக்கு சிறப்பு தேன் அபிஷேகமும், பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரிக்கு பால், தயிர், இளநீர், விபூதி, திருமஞ்சம் உள்ளிட்ட 18 வகையான விஷேச பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து, அலங்காரம், மகாதீபாரதணை நடைபெற்றது.
பின்னர் உற்சவர் நடராஜர், சிவகாமசுந்தரி சாமிகளை பக்தர்கள் தோளில் சுமந்தவாறு கோவில் உட்பிரகாரம் வழியாக வலம் வந்தனர். கோவில் குருக்கள் நாகராஜ், சோகு ஆகியோர் பூஜைகளை செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு களி பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் எடுத்தனூர் கிராமத்தில் அமைந்துள்ள உண்ணாமுலையம்மன் உடனுறை அண்ணாமலையார் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடைபெற்ற வேள்வி வழிபாட்டில் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.