அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2023-01-06 16:57 GMT



திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆருத்ரா தரிசன விழா

மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் அன்று சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும். அதன்படி நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு அருணாசலேஸ்வரர் கோவிலில் 5-ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்ந்து நேற்று காலை சாமிக்கும், அம்பாளுக்கும் பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடந்தது.

சாமிக்கு தீப 'மை'

அதைத் தொடர்ந்து சாமிக்கு சமீபத்தில் நடந்து முடிந்த கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்பட்ட மகா தீப கொப்பறையில் இருந்து எடுக்கப்பட்ட தீப 'மை' நடராஜருக்கு திலகமிடப்பட்டது. அப்போது ஆயிரங்கால் மண்டபத்தில் திரண்டு இருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு 'அரோகரா' என்று பக்தி கோஷம் எழுப்பினர்.

இதனையடுத்து மாணிக்கவாசகர் உற்சவம் முன்னே செல்ல நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து பக்தர்கள் வெள்ளத்தில் ஆடியபடி திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே வந்து மாடவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்கு 'மை' பிரசாதம்

தொடர்ந்து தீப 'மை' பிரசாதம் நேற்று முதல் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

மேலும் நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள் அதற்கான ரசீதுகளை காண்பித்து கோவில் நிர்வாக அலுவலகத்தில் தீப 'மை' பெற்றுக்கொள்ளலாம் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆரணி

ஆரணி கோட்டை கைலாயநாதர் கோவிலில் ஆருத்ரா விழாவையொட்டி சிவன், நடராஜர், சிவகாமி அம்மாள் மற்றும் மாணிக்கவாசகருக்கு சிறப்பு யாக பூஜை, அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து உற்சவர் நடராஜர், சிவகாமி அம்மாள், மாணிக்கவாசகர் ஆகிய சாமி சிலைகள் மாட வீதியின் வழியாக வீதி உலாவும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோன்று புத்திரகாமேட்டீஸ்வரர், பூமிநாதர், வேதபுரீஸ்வரர், அருணாசலேஸ்வரர், பையூர்-சேவூர் பகுதியில் உள்ள விருப்பாச்சிஸ்வரர், மெய்யூரில் மெய்கண்டீஸ்வரர், ஆபத்சாகயஸ்வரர் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு மூலவருக்கும், நடராஜர் சிவகாமசுந்தரி அம்மனுக்கும் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் கோபுர தரிசனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து பக்தர்களுக்கு தீப 'மை' பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலையில் நடராஜர் சிவகாமசுந்தரி அம்மனுடன், 63 நாயன்மார்கள், சந்தான குரவர்கள் தனித்தனியே சப்பரத்தில் வீதி உலா நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்