ஆருத்ரா நிறுவன மோசடி விவகாரம் - விசாரணைக்கு ஆஜரான பா.ஜ.க. நிர்வாகி
பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த அலெக்ஸ் விசாரணைக்கு ஆஜரானார்.;
சென்னை,
சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீட்டாளர்களிடம் முதலீடாக பெற்ற 2,438 கோடி ரூபாயை மோசடி செய்ததாக பொளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிறுவனத்தின் இயக்குனர் ஹரீஷ் என்பவரை கைது செய்த போலீசார், அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஆருத்ரா கோல்டு நிறுவனம் மூலமாக பெற்ற பணத்தில் பா.ஜ.க.வில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் மாநில பொறுப்பை பெறுவதற்காக, பா.ஜ.க.வைச் சேர்ந்த அலெக்ஸ் மற்றும் சுந்தர் ஆகியோருக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் விசாரணையில் ஹரீஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர்கள் இருவரும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். இதைத் தொடர்ந்து பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த அலெக்ஸ், சென்னை அசோக்நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜரானார்.