தாராபுரம்
தாராபுரத்தில் நடந்து வரும் அரசு கலைக்கல்லூரி கட்டுமான பணிகளை அமைச்சர் கயல்விழி ஆய்வு செய்தார். அப்போது கட்டிட பணிகளை நிர்ணயம் செய்யப்பட்ட காலத்திற்குள் முடிக்க உத்தரவிட்டார்.
அரசு கலைக்கல்லூரி
தாராபுரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமான பணிக்கு ரூ.12½ கோடியை ஒதுக்கீடு செய்தது. கட்டுமான பணிகளை கடந்த மாதம் 23-ந் தேதி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் ஐ.டி.ஐ. வளாகத்தில் தொடங்கி வைத்தனர்.
அதன் முதற்கட்ட பணி தொடங்கி தற்போது நடந்து வருகிறது. கல்லூரி கட்டிட கட்டுமான பணிகள் குறித்து ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அமைச்சர் கூறியதாவது:-
தாராபுரத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல தற்போது பணி நடைபெற்று வருகிறது. அரசு கலைக்கல்லூரி கட்டிடம் நிரணயிக்கப்பட்ட ஒரு ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார். மேலும் அதே வளாகத்தில் தாராபுரம் ஐ.டி.ஐ.க்கு ரூ.3 கோடியில் கட்டப்பட்டு வரும் ஆயுர்வேத கூட கட்டுமான பணிகளையும் அமைச்சர் கயல்விழிஆய்வு செய்தார்.