கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு உள்ளது

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக கலெக்டர் வளர்மதி தெரிவித்தார்.

Update: 2023-10-06 19:19 GMT

கலெக்டர் பேட்டி

சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மாநாடு நடைபெற்றது. இதில் மாவட்டம் தோறும் வளர்ச்சித் திட்ட பணிகள், சட்டம் ஒழுங்கு குறித்து முதல்- அமைச்சர் கேட்டறிந்தார்.

இது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தினத்தந்திக்கு அளித்த பேட்டி வருமாறு:-

மாநாட்டில் முதல்-அமைச்சர் விடியல் பயணம், நான் முதல்வன், மக்களை தேடி மருத்துவம், ஊட்டச்சத்தை உறுதி செய், காலை சிற்றுண்டி, புதுமைப்பெண் இந்த 6 திட்டங்களைதான் முன்வைத்தார்கள்.

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் தனியார் மருத்துவமனை உள்பட அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுபவர்களுக்கு சிகிச்சை செலவு இலவசம் என்ற தகவலை அனைவருக்கும் பரப்புங்கள் என அறிவுறுத்தினார்.

தேர்ச்சி விகிதம் குறைவு

ராணிப்பேட்டை மாவட்டத்தை பொருத்தவரையில், பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருக்கிறதே என கேட்டார்கள். கடந்த கல்வி ஆண்டில் மாநில அளவில் ராணிப்பேட்டை மாவட்டம் பின்தங்கியே இருந்தது. அதற்காக பல முயற்சிகள் எடுத்து தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த திட்டங்கள் தீட்டி உள்ளோம். இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தி காட்டுவோம் என கூறினேன்.

காலை சிற்றுண்டி திட்டத்தில் அனைத்து பணிகளையும் முழுமையாக முடித்தது தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை மாவட்டம் மட்டும் தான்.

புதுமைப்பெண் திட்டத்தை மூன்றாவது கட்டமாக செயல்படுத்தி வருகிறோம். பள்ளிக் கல்வித்துறையை பொறுத்த வரையில், பள்ளி பார்வை என்ற புதிய செயலியை கொண்டு வந்துள்ளார்கள். மாணவர்களின் வருகை பதிவை கவனிக்க இச்செயலி உதவும். நான் முதல்வன் திட்டம் மூலம் மாணவர்கள் எத்தனை பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்கள், உயர்கல்விக்கு ஆலோசனை பெற்றிருக்கிறார்கள் என தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

மகளிர் உரிமைத்தொகை திட்டம்

முதல்வரின் முகவரி மூலம் பெறப்படும் மனுக்களை உரிய கால அவகாசத்திற்குள் முடிக்க வேண்டும் என கூறியுள்ளார்கள். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 31 நாட்களில் முடிக்க வேண்டும் என்பதை நாம் 40 நாட்களில் முடிக்கிறோம்.

ஒட்டுமொத்தத்தில் எல்லா நலத்திட்ட உதவிகளும் மக்களுக்கு போய் சேர வேண்டும் என்பதுதான். பிற மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் வழிமுறைகளில் ஏதாவது சிறந்த வழிமுறைகள் இருக்கிறதா என மற்ற மாவட்ட கலெக்டர்களிடம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கான ஒரு வாய்ப்பாக இருந்தது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாநில அளவில் ராணிப்பேட்டை மாவட்டம்தான் எல்லா மனுக்களையும் உரிய முறையில் விசாரணை செய்து, அரசு கூறிய கால அவகாசத்திற்குள் முடித்து இருக்கிறோம். பணம் போய் சேருவதில் உள்ள சிக்கல்களையும் களைந்துள்ளோம். பரிசீலனைகள் உள்ள மனுக்களுக்கும் உரிய ஏற்பாடு செய்திருக்கிறோம்.

சட்டம்-ஒழுங்கு

சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை ஒப்பிடும்போது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் அதிக அளவு வழக்குகளில் தண்டனை வாங்கி கொடுத்து இருக்கிறார்கள். அதேபோல் நீங்களும் தண்டனை விகிதத்தை உயர்த்துங்கள் என பிற மாவட்டங்களில் உள்ளவர்களிடம் கூறினார்கள்.

சாராய வழக்குகள் நம்மை சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிக அளவில் இருக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டதால் வழக்குகள் குறைவாக இருக்கிறது.

கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் உதவி வழங்குதல் போன்றவற்றில் பின்தங்கி இருப்பதாக கூறி இருக்கிறார்கள். முன்னேறுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மொத்தத்தில் எல்லாத்துறையிலும் நன்றாக பணிபுரிந்து வருகிறார்கள். அனைத்து அரசு திட்டங்களும் மக்களை போய்ச்சேர வேண்டும் அவ்வளவு தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்