கார்பைட் கற்கள், எத்திலின் போன்ற ரசாயனங்களால் செயற்கை முறையில் பழுக்க வைக்கும் மாம்பழங்கள்

முக்கனிகளில் முதன்மையானது மாங்கனி. அதன் இனிய சுவை சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் வாயில் எச்சில் ஊறச் செய்துவிடும்.

Update: 2023-04-30 19:12 GMT

மருத்துவக்குணம்

நமது உடலுக்கு முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் மாம்பழத்தில் அதிகமாக கிடைக்கிறது. அதில் பொட்டாசியம் மற்றும் நார்சத்து மிகுந்திருப்பதால், உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது.

இப்படிப்பட்ட சத்தும், சுவையும் மிகுந்த மாம்பழத்திற்கு சீசன் தொடங்கினால் போதும், ஒரு பிரச்சினையும் கூடவே சேர்ந்து வருகிறது. ரசாயனங்களால் பழுக்கப்பட்ட மாம்பழங்கள் தான் அந்த பிரச்சினைக்கு காரணம். குறுகிய காலத்தில் லாப நோக்கத்தில் ரசாயன கல் மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் விற்பனை அதிகரித்து வருவதால், மக்கள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.

ரசாயன கற்கள் கொண்டு மாம்பழங்கள் பழுக்க விடப்படும் செயல்களை தடை செய்யக்கோரி பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதுகுறித்து பொதுமக்களின் கருத்து வருமாறு:-

நச்சுத்தன்மை கொண்ட வாயு

புதுக்கோட்டை உணவு பாதுகாப்பு அதிகாரிகள்:- மாம்பழங்களை மரத்தில் இருந்து பறித்து இயற்கை முறையில் பழுக்க வைப்பது குறைந்து செயற்கை முறையில் பழுக்க வைப்பது அதிகரித்துவிட்டது. பளபளவென்று அழகான மஞ்சள் நிறத்தில் கருப்பு படியாமல் இருக்கும் மாம்பழங்கள் பார்வைக்கு அழகாக இருக்கலாம். ஆனால் ஆரோக்கியத்துக்கு நன்மை செய்யும் என்று சொல்ல முடியாது. இதுகுறித்த விழிப்புணர்வு இருந்தாலும் பழங்கள் வாங்கும் போது அவை இயற்கையாக பழுக்க வைக்கப்பட்டதா? அல்லது செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டதா? என்பதை எப்படி கண்டறிவது என்ற குழப்பம் உண்டாகிறது. பயன்படுத்தும் வெள்ளை நிற கால்சியம் கார்பைடு கற்களை துணியில் அல்லது பேப்பரில் பொட்டலமாக மடித்து கட்டிவிடுவார்கள். இதை மாம்பழ காய்களை குவியலாக போட்டு அதன் நடுவில் வைத்துவிட்டால் அவை வேகமாக பழுத்துவிடும். இதை விட கொடுமை இந்த கார்பைடு கற்களை பொடியாக்கி மாம்பழ காய்கள் மீது ஸ்பிரே செய்வது. இதிலிருக்கும் அசிட்டிலின் எனும் நச்சுத்தன்மை கொண்ட வாயு வெளியேறி ஒரே நாளில் மாம்பழம் முழுவதும் பழுத்துவிடுகிறது. இவற்றை சாப்பிடும் போது வயிற்றுபோக்கும், தலைவலி, மயக்க உணர்வு வரக்கூடும். நெஞ்செரிச்சலும் ஏற்படும்.

கடும் நடவடிக்கை

புதுக்கோட்டை மொத்த பழ வியாபாரிகள்:- கார்பைடு கற்கள் கொண்டு பழங்களை பழுக்கவைப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். மாம்பழம் எந்த குறையுமில்லாமல், கருப்பு இல்லாமல் பளபளவென்று ஒரே நிறத்தில் இருந்தால் நிச்சயம் அவை செயற்கையாக பழுக்கப்பட்ட மாம்பழங்கள் தான். மாம்பழங்களை நுகர்ந்து பார்த்தால் அவற்றிலிருந்து மணத்தை நன்றாக உணர்ந்தால் அவை இயற்கையானவை, சிறிதும் வாசமில்லாமல் இருந்தால் அது செயற்கையானவை என்பதையும் அறியலாம். கார்பைடு கற்கள் கொண்டு பழுக்கவைக்கும் வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரசாயன ஸ்பிரே

முக்கண்ணாமலைப்பட்டியை சேர்ந்த ஜமால்முகமது:- மா, பலா, வாழை என முக்கனிகளில் முதலிடம் பிடிப்பது மாம்பழமே ஆகும். சுவையால் மட்டுமல்ல மணம் பரப்பியே மக்களின் மனதையும் கவர்ந்து இழுப்பதால் மாம்பழத்துக்கு தனி மவுசு உண்டு. மாம்பழங்களில் இனிப்பு சுவையுடன், மருத்துவ குணங்களும் அதிகம் உள்ளன. இந்தநிலையில் தற்போது மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால் தற்போது கடைகளில் மாம்பழங்கள் விற்பனை ஜோராக நடக்கிறது. மேலும் சாலையோரங்களில் குவித்து போட்டும் விற்கப்படுகின்றன. இதில் ரசாயனம் மற்றும் கார்பைடு கற்கள் மூலம் செயற்கையாக பழுக்க வைத்து மாம்பழங்கள் விற்கப்படுவதால் மறைமுகமாக ஆபத்தையும் பரப்புகின்றனர். இந்த மாம்பழங்களை சாப்பிடுவதால் பொதுமக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. மாம்பழங்கள் மட்டுமின்றி வாழைப்பழங்களையும் ரசாயன ஸ்பிரே அடித்து பழுக்க வைக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து இதுபோன்ற பழங்கள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்.

கொம்பிலே பழுப்பதுதான் சுவை

பொன்னமராவதியை சேர்ந்த பட்டிமன்ற நடுவர் நெ.இரா.சந்திரன்:- மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி இரந்தழைப்பார் யாவருமங் கில்லை என்ற அவ்வையார் கூற்றின்படி இயற்கையாக பழுக்கும் பழம் என்பது எந்த இடையூறும் தராதது. அதனால் தான் உண்டால் நீள் ஆயுள் தரவல்ல நெல்லிக்கனியை அவ்வையார் அதியமானுக்கு கொடுத்தார். மா, பலா, வாழை என்ற முக்கனிகள் உள்ளிட்ட எக்கனியானாலும் கொம்பிலே பழுப்பதுதான் சுவை மிகுந்ததாகவும், இயற்கை தந்த சத்துகள் அனைத்தையும் முழுமையாக தருவதாகவும் இருக்கும். இயற்கையில் கிடைக்கும் கொம்புத்தேன் தானும் கெடாது, தன்னை உண்பவர்களுக்கும் கேடு விளைவிக்காது. ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்படும் பழங்கள் தானும் கெட்டு, தன்னை உண்பவர் உடல் நலத்தையும் கெடுக்கும். எனவே செயற்கை முறையில் பழுக்க வைக்கும் எந்த பழங்களையும் உண்பதை பொதுமக்கள் அனைவரும் தவிர்க்க வேண்டும்.

புற்றுநோய் ஏற்படும் அபாயம்

அறந்தாங்கியை சேர்ந்த முஜிபுர் ரஹ்மான்:- இயற்கையான முறையில் பழுத்த பழங்கள்தான் உடல்நலத்துக்கு ஏற்றது. ஆனால் கார்பைட் கற்கள், எத்திலின் போன்ற ரசாயனங்களால் மாம்பழங்களை செயற்கை முறையில் வியாபாரிகள் பழுக்க வைக்கிறார்கள். இதனை உண்ணும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சினைகள், கண் எரிச்சல், சரும அலர்ஜி, வாந்தி போன்றவை ஏற்படும். சில நேரங்களில் சுவாசம் தொடர்பான பிரச்சினைகளும், புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. எனவே செயற்கை முறையில் பழுக்கப்படும் மாம்பழங்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

செயற்கையாக பழுக்க வைக்கும் மாம்பழங்களை கண்டுபிடிப்பது எப்படி?

கார்பைட் கற்கள் மற்றும் எத்திலீன் திரவ துளிகள் கொண்டு மாம்பழங்களை பழுக்க வைப்பது பெருகி வருகிறது. மாம்பழங்கள் இயற்கையான முறையில் பழுக்கும்போது, அடிப்பகுதியில் இருந்துதான் பழுக்கத் தொடங்கும். எனவே இயற்கையான முறையில் பழுத்த மாம்பழங்களின் காம்புப் பகுதி பெரும்பாலும் மஞ்சள் நிறத்தில் இருக்காது. மேலும் அனைத்து பகுதிகளும் ஒரு சேர மஞ்சள் நிறத்திலும் இருக்காது. சில பகுதிகள் பச்சை, சிவப்பு, மஞ்சள் என நிறங்கள் வேறுபடும். ஆனால் கல் வைத்து பழுக்கப்பட்ட மாம்பழங்கள் அனைத்து பகுதியும் பளீர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இயற்கையாகப் பழுத்த ஒரு மாம்பழம் வீட்டில் இருந்தாலே அதன் மணம் காற்றில் கலந்து வீசும். ஆனால் செயற்கை முறையில் பழுக்க விடப்பட்ட மாம்பழங்கள் மணம் வீசாது.

மாம்பழத்தை நறுக்கும்போது பூ மாதிரி சதை கிழிந்தால் அது நல்ல பழம் ஆகும். நறநறவென்றோ, சதைப்பகுதியின் இறுதியில் வெள்ளை நிறத்திலோ இருந்தால் அது ரசாயனம் கொண்டு பழுக்க விடப்பட்ட மாம்பழங்கள் ஆகும். நல்ல மாம்பழங்களை தண்ணீரில் போட்டால் மூழ்கி விடும். ஆனால் செயற்கையாக பழுக்க விடப்பட்ட மாம்பழங்கள் மிதக்கும். கிராமப்புறங்களை போல நகர் பகுதிகளில் மாம்பழங்கள் பழுக்கவிடப்படும் புகை மூட்டும் பழக்கம் இல்லை. எனவே மக்கள் மாம்பழங்கள் வாங்கும்போது மிகவும் கவனமாக பார்த்து வாங்க வேண்டும். தேர்வு செய்து வாங்கும் மாம்பழங்களை அரிசி டப்பாவில் போட்டுக்கூட பழுக்க விடலாம்.

பொதுவாகவே மாம்பழங்கள் விளைச்சலின்போது ரசாயன மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. மார்க்கெட்டுக்கு வரும்போது எத்திலீன் திரவங்களும் தெளிக்கப்படுகின்றன. எனவே தேர்வு செய்து வாங்கும் மாம்பழங்களை சுமார் 1 முதல் 2 மணி நேரம் தண்ணீரில் போடலாம். முடிந்தவரை தோல் நீக்கி சாப்பிடலாம்.

Tags:    

மேலும் செய்திகள்