கலைத்திருவிழா போட்டிகள் தொடக்கம்

பெரம்பலூரில் தொடங்கிய மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

Update: 2023-10-26 18:18 GMT

கலைத்திருவிழா போட்டிகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் 6 முதல் 12 வகுப்புகள் வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் மூலம் கலைத்திருவிழா போட்டிகள் பள்ளி, வட்டார அளவில் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டது. அதில் வட்டார அளவில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நேற்று தொடங்கின. நேற்று 6 முதல் 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றன. அவர்களுக்கு கவின் கலை, நுண்கலை, மொழித்திறன் போட்டிகள் பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலையில் உள்ள ஸ்ரீ முத்தையா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், இசை வாய்ப்பாடு, கருவி இசை போட்டிகள் பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள மாவட்ட சாரணர் பயிற்சி மையத்திலும், நடன போட்டிகள் பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், நாடக போட்டிகள் பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடந்தது.

திறமைகளைவெளிப்படுத்தினர்

வட்டார அளவில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் இந்த கலைத்திருவிழா போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 9, 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இன்றும் (வெள்ளிக்கிழமை), 11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு வருகிற 30-ந்தேதியும் மேற்கண்ட இடங்களில் மாவட்ட அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறுகிறது.

மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 21-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை மாநில அளவிலான போட்டிகள் நடைபெறவுள்ளன. போட்டியில் வெற்றி பெறும் மாணவருக்கு கலையரசன் விருதும், மாணவிக்கு கலையரசி விருதும் வழங்கப்பட உள்ளது. மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தர வரிசையில் முதன்மைப்பெறும் மாணவ-மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படவுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்