புலியை பிடிக்க சிறப்பு பயிற்சி பெற்ற 'எலைட் படை' வருகை
பேச்சிப்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் புலி மீண்டும் புகுந்து நாய்களை துரத்திய நிலையில் அதை பிடிக்க சிறப்பு பயிற்சி பெற்ற ‘எலைட் படை’ வீரர்கள் வந்துள்ளனர்.
குலசேகரம்,
பேச்சிப்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் புலி மீண்டும் புகுந்து நாய்களை துரத்திய நிலையில் அதை பிடிக்க சிறப்பு பயிற்சி பெற்ற 'எலைட் படை' வீரர்கள் வந்துள்ளனர்.
அட்டகாசத்தில் ஈடுபடும் புலி
பேச்சிப்பாறை அணை அருகே உள்ள சிற்றாறு ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு, மல்லன் முத்தன்கரை, புரையிடம், மூக்கறைக்கல் பழங்குடியினர் குடியிருப்புப் பகுதிகளில் கடந்த 3-ந் தேதி முதல் ஒரு புலி அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. புலியின் பசிக்கு தொழிலாளர்களின் ஆடுகள், மாடுகள் மற்றும் வளர்ப்பு நாய்கள் இரையாகி வருகின்றன. இதனால் ரப்பர் தோட்ட தொழிலாளர்களும், பழங்குடியின மக்களும் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
இந்தநிலையில் வனத்துறையினர் வனப்பகுதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் 25 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் வைத்து புலியின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.
நாய்களை துரத்திய புலி
மேலும், புலியை பிடிக்க குடியிருப்புப் பகுதிகளில் 2 இடங்களில் கூண்டுகள் வைத்துள்ளனர். அத்துடன் குடியிருப்பில் உள்ள ஆடு, மாடுகளை இரவு நேரத்தில் இங்குள்ள முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் கட்டி வைத்து பாதுகாத்து வருகிறார்கள். கூண்டு வைக்கப்பட்டு 3 நாட்கள் ஆகியும் புலி சிக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புலி நாய்களை துரத்தியவாறு சிற்றாறு குடியிருப்பு பகுதிக்கு வந்ததை சிலர் பார்த்துள்ளனர். அவர்கள் கூச்சலிட்டவுடன் புலி திரும்பி ஓடியது.
எலைட் படை வந்தது
இந்தநிலையில் புலியைப் பிடிக்க சிறப்பு பயிற்சி பெற்ற 2 பேர் அடங்கிய 'எலைட் படையினர்' நேற்று மாலையில் சிற்றாறு குடியிருப்பு பகுதிக்கு வந்தனர். மேலும் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் வகையில் களக்காடு முண்டன்துறை புலிகள் சரணாலய வனகால்நடை டாக்டர் மனோகரன் மற்றும் முதுமலை வனக்கால்நடை டாக்டர் கலைவாணன் ஆகியோர் அடங்கிய குழுவினரும் நேற்று முன்தினம் இரவு சிற்றாறு குடியிருப்புக்கு வந்தனர். இவர்களுடன் மாவட்ட வன அலுவலர் இளையராஜா ஆலோசனை நடத்தினார். இதையடுத்து புலியைப் பிடிக்கும் நடவடிக்கைகள் புது வேகம் பெற்றுள்ளன.
மக்கள் வெளியே வரவேண்டாம்
இதற்கிடையே சிற்றாறு குடியிருப்பு மக்கள் மாலை 6 மணிக்குப் பிறகு வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்து வருகிறார்கள். அதன்படி குடியிருப்பு மக்களும் வீடுகளுக்குள் முடங்கிக் கொண்டனர்.
வனத்துறையினரின் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் புலியைப் பிடித்து அதன் அட்டகாசத்திற்கு விரைவில் முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.